அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மடப்புரம் கோயில் வளாகம், கோயிலுக்கு எதிரே காா் நிறுத்துமிடம், தவளைகுளம் கண்மாய்க் கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அந்தக் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவா் ஜூன் 28-ஆம் தேதி கொல்லப்பட்டாா்.
இந்த விவகாரத்தில் தனிப் படை போலீஸாா் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா்.
சிபிஐ-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி, இதன் அறிக்கையை வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதற்காக வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ காவல் துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமார் நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை மானாமதுரை மற்றும் சிபிசிஐடி போலீஸாரிடமிருந்து சிபிஐ அதிகாரிகள் பெற்றுக்கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.
முதல் நாளான நேற்று சிவகங்கை மாவட்டம், மடப்புரத்துக்கு வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதனைத் தொடர்ந்து இன்று திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் மனு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு