ENG vs IND: "ஆர்ச்சரை இதனால்தான் களமிறக்கினேன்" - ஆட்ட நாயகன் ஸ்டோக்ஸ் கூறுவதென்ன?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்தன.
மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் இரு அணிகளுமே 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டும், இந்திய அணியில் கே.எல். ராகுலும் சதமடித்தனர்.
மேலும், முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் முற்றிலுமாகத் தடுமாறி 192 ரன்களில் ஆல் அவுட்டானது.
வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி ரூட், ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஜெய்ஸ்வாலை 0 ரன்னில் ஆர்ச்சர் வெளியேற்ற, கருண் நாயர் மற்றும் கேப்டன் கில்லை தனது அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் ப்ரைடன் கார்ஸ்.
ஆட்ட நேரம் முடிவடைய சில நிமிடங்களே இருப்பதால் பேட்ஸ்மேனை இறக்கி எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழக்க வேண்டாமென இறக்கப்பட்ட ஆகாஷ் தீப்பும் அவுட்டாக நான்காம் நாள் ஆட்டம் நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில், 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் ராகுலும், பண்ட்டும் களமிறங்கினர். அதேசமயம், மீதமிருக்கும் 6 விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தினால் நமக்கு வெற்றி என இங்கிலாந்தும் களமிறங்கியது.
அதற்கேற்றார்போலவே, பண்ட்டை 9 ரன்களில் கிளீன் போல்டாக்கி இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் ஆர்ச்சர். அடுத்தடுத்து ராகுலும், வாஷிங்டன் சுந்தரும் அவுட்டாக மொத்தமாக 7 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு முனையில் ஜடேஜா மட்டும் நிலைத்து நின்று ஆட நிதிஷ் குமார் ரெட்டி, பும்ரா ஆகியோர் தலா ஒன்பது ஓவர்கள் தாக்குப்பிடித்து அவுட்டாகினர். இறுதியில் 5 ஓவர் தாக்குப்பிடித்த சிராஜும் அவுட்டாக இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேசமயம், 181 பந்துகளில் 61 ரன்கள் என கடைசிவரை நின்ற ஜடேஜாவின் ஆட்டம் வீணானது.
மேலும், அடுத்த பந்திலேயே சிக்ஸும் அடித்தார். ஜடேஜா - பும்ரா கூட்டணி நிதானமாக 20 ஓவர்களைக் கடந்து ஆடிக்கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை பும்ரா தூக்கியடிக்க முயல அது டாப் எட்ஜ் ஆகி டிம் கைகளில் தஞ்சமடைந்தது. 54 பந்துகளில் 5 ரன்களுடன் பெவிலியன் சென்றார் பும்ரா.

முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து கேப்டன் பேன் ஸ்டோக்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
லார்ட்ஸ் மைதானத்தில் ஸ்டோக்ஸ் பெறும் நான்காவது ஆட்டநாயகன் விருது இது.
ஆட்ட நாயகன் மெடல் பெற்றுக்கொண்ட பின் பேசிய ஸ்டோக்ஸ், "ஆர்ச்சருடன் வந்ததற்கு அதுவும் (2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி) ஒரு காரணம். அவர் சிறப்பான ஒன்றைச் செய்வார் என்று உள்ளுணர்வில் தோன்றியது.
பஷீர்தான் அந்த கடைசி விக்கெட்டை எடுக்க வேண்டும் என எழுதியிருக்கிறது. அவர் ஒரு முழுமையான போர்வீரர்.
நேற்றைய ஆட்டத்தில் எனக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. ஆனால், என்னை எதுவும் தடுக்கப்போவதில்லை.
நான் ஆல்ரவுண்டர் என்பதால் ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட என நன்கு வாய்ப்புகள் கிடைக்கிறது.
உண்மையில் நான்கு நாள்களாக உறங்கக் காத்திருக்கிறேன்" என்றார்.