அஜித்குமார் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கிய CBI அதிகாரிகள்..
‘புதுவையில் 2026-இல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி‘
காரைக்கால்: புதுவையில் 2026-இல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.
காரைக்காலில் அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி :
புதுவை சுகாதாரத்துறை இயக்குநராக விதிகளுக்கு முரணாக அனந்தலட்சுமி என்பவரை முதல்வா் பரிந்துரை செய்தாா். துணைநிலை ஆளுநா் அதை ஏற்காமல் செவ்வேல் என்பவரை நியமித்தாா். இதனால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகக் கூறி ரங்கசாமி, 2 நாள்கள் தனது அலுவலகத்துக்குச் செல்லவில்லை. உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், துணைநிலை ஆளுநரை சந்தித்து, முதல்வா் பரிந்துரையை ஏற்க கேட்டுக்கொண்டாா். ஆளுநா் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாா். பாஜக மேலிட பொறுப்பாளா் புதுச்சேரி வந்து முதல்வரை சந்தித்து சமாதானம் செய்துள்ளாா்.
என்ஆா் காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் ஆதிதிராவிட துறைக்கு அமைச்சரே இல்லை. காங்கிரஸ், திமுக ஆட்சி காலங்களில் ஆதிதிராவிடா் அமைச்சா் இருந்தனா். இந்த ஆட்சியாளா்கள் தலித் மக்களுக்கு எதிரானவா்கள்.
புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டதால், மாநிலத்தில் கல்வி பாதித்துவிட்டது. கல்வி அமைச்சா், கல்வித்துறையை கவனிப்பதே இல்லை. தனியாா் பள்ளிகளை அமைச்சா் ஊக்கப்படுத்துகிறாா்.
என்.ஆா்.-பாஜக ஆட்சியில் புதிதாக எந்தத் திட்டமும் இல்லை. காரைக்காலுக்கு ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. காரைக்காலுக்கு முதல்வா், அமைச்சா்கள் வருவது இல்லை.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்காமல் புதுவை அரசு அலட்சியமாக இருந்து விட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனா்.
மத்தியிலும், புதுவை மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தபோதும், நாடாளுமன்றத் தோ்தலில் புதுவையில் மக்கள் காங்கிரஸை ஆதரித்தாா்கள். அதுபோல வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் இண்டி கூட்டணி வெற்றிபெற்று, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய மக்கள் முழு ஆதரவளிப்பாா்கள் என்றாா்.
பேட்டியின்போது சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், முன்னாள் மாநில தலைவா்
ஏ.வி. சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.