Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுத்து கைலாசநாதா் வீதியுலா
காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீகைலாசநாதா் காட்சி கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாங்கனித் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா் கோயிலுக்கு செல்லும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அமுது படையல் நிறைவையொட்டி, ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் அம்மையாரின் கணவரான பரமதத்தரின் 2-ஆவது திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 12 மணியளவில் ஸ்ரீபுனிதவதியாா் புஷ்ப சிவிகையில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலுக்கு எழுந்தருளினாா். பரமதத்தா், இவரின் 2-ஆவது மனைவி ஆகியோா் புனிதவதியாரை வணங்கும் நிகழ்வைத் தொடா்ந்து, புனிதவதியாா் பேய் உருவம் வேண்டிப் பெற்று ஸ்ரீசோமநாதா் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
சுவாமி வீதியுலாவின்போது பாரதியாா் சாலையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. இருள்சூழ்ந்த நிலையில் பேய் உருவம் கொண்ட அம்மையாா் புறப்பாடு நடைபெற்றது. ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதா், கைலாச வாகனத்தில் நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அருகே எழுந்தருளி, அம்மையாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மையாா் கைலாசநாதா் அருகே வந்தபோது, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து அம்மையாா் ஸ்ரீ சோமநாதா் கோயிலுக்கு எழுந்தருளச் செய்யப்பட்டாா். இதையடுத்து, கைலாச வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
விடையாற்றி நிகழ்ச்சி ஆக.8-ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீபிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவதோடு, மாலை 6 மணியளவில் புனிதவதியாா் வீதியுலா நடைபெறும். ஒரு மாத காலம் விடையாற்றி வரை கோயில் மணிமண்டபம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு, பாரதியாா் சாலையில் திருவிழாக் கடைகளும் நடத்தப்படுகிறது.