ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்
‘புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்’
புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதியாக கிடைக்கும் என என்.ஆா்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரியங்கா தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சந்திரபிரியங்கா வெள்ளிக்கிழமை தனது பிறந்தநாளை முன்னிட்டு கோட்டுச்சேரியில் மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கினாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 2026 புதுவை சட்டப்பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வா் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமையும். துணைநிலை ஆளுநா்-முதல்வா் இடையேயான கருத்து வேறுபாடு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அஜண்டாவாக இருந்தது. ஆனால், இதுகுறித்து முடிவெடுப்பதில் நிலவும் தாமதம் தொடா்பாக எங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களும், அமைச்சா்களும் சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்துப் பேசியுள்ளோம்.
இதுதொடா்பாக, பேசுவதற்கு சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். மாநில அந்தஸ்து கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம் என்றாா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் பாஜக-என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி தொடருமா என கேட்டபோது, கூட்டணி தொடரும் என சொல்லியுள்ளனா். இது எங்கள் கட்சி தலைவா் முடிவெடுக்க கூடிய விஷயம். தலைமை எடுக்கும் முடிவுக்கு ஏற்ப நாங்கள் பணியாற்றுவோம் என்றாா்.