சென்னை: "என்னாச்சு? நீங்க ஓகேதான?" - டிராஃபிக் போலீசாரின் வார்த்தையால் நெகிழ்ந்த பெண்; என்ன நடந்தது?
சென்னை போக்குவரத்து காவலருடனான ஒரு சிறிய உரையாடல், பெண் ஒருவரை எப்படி நெகிழ வைத்தது என்பது குறித்து அவர் லிங்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த ஜனனி பொற்கொடி என்ற பெண், "கடந்த வாரம் நான் சொல்ல முடியாத அளவுக்கு மன அழுத்தத்திலும் இருந்தேன். வேலை அழுத்தம், மன அழுத்தம், எதிர்பார்ப்பு எனப் பல்வேறு விஷயங்கள் என் மனதிற்குள் இருந்தன.
அந்தச் சமயத்தில் ஒரு போக்குவரத்துக் காவலரால் நான் நிறுத்தப்பட்டேன். அதற்கான காரணம் கூட எனக்கு நினைவிற்கு இல்லை...

ஆனால் அது போக்குவரத்து விதி மீறல் தொடர்பான நிறுத்தமல்ல, அந்தக் காவலர் என்னைப் பார்த்து, என்னாச்சு? எல்லாம் ஓகே தானே? என்று கேட்டார்.
அந்தச் சமயத்தில் யாரோ ஒருவர் உண்மையான அக்கறையுடன் என்னிடம் இப்படிக் கேட்டதால் கண்ணீர் வந்துவிட்டது. எதிர்ப்பாராத அக்கறையில் அந்த நொடியில் நான் பல வாரங்களாக அடக்கி வைத்திருந்த அனைத்து உணர்ச்சிகளும் வெளிவந்து விட்டன.
அந்த மன அழுத்தங்களை விடுவிக்க அந்தக் கேள்வி எனக்கு உதவியாக இருந்தது. அந்த அழகை என்னை லேசாக உணர வைத்தது.
வலிமையாக இருக்க முயன்றாலும் நாம் அனைவரும் பாதிக்கப்படக்கூடியவர்கள். இப்படி யாராவது போராடுவதை நீங்கள் கண்டால் ஒரு அன்பான வார்த்தையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் உண்மையில் நன்றாக உணர்ந்தேன்” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்தப் பதிவுதான் இணையத்தில் வைரலாகி, ஜனனி பொற்கொடிக்குத் தங்களின் ஆதரவையும் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு நன்றியையும் இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.