செய்திகள் :

Oho Enthan Baby Review: இளமை துள்ளும் காதல் கதையின் ஓப்பனிங்கலாம் நல்லாயிருக்கு... ஆனா ஃபினிஷிங்?

post image
சிறுவயதிலிருந்தே பெற்றோரின் சண்டைகள், அதனால் வீட்டில் நிலவும் பதற்றம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க சினிமாவை தோழனாக மாற்றிக்கொள்கிறான் அஷ்வின் (ருத்ரா). வளர்ந்த பின் சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவோடு பயணிப்பவர், இரண்டு ஸ்கிரிப்ட்களை எடுத்துக்கொண்டு நடிகர் விஷ்ணு விஷாலைச் சந்திக்கச் செல்கிறார். அங்கே விஷ்ணு விஷாலுக்கு அந்த இரண்டு கதைகளிலும் உடன்பாடு இல்லாமல் போக, ஒரு லவ் ஸ்டோரி என்றால் ஓகே என்கிறார். எனவே தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையே கதையாகச் சொல்லத் தொடங்குகிறார் அஷ்வின். அந்தக் கதை விஷ்ணு விஷாலுக்குப் பிடித்ததா, நிஜ வாழ்வில் அஷ்வினின் காதலிலிருக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதே இந்த ‘ஓஹோ எந்தன் பேபி’.
Oho Enthan Baby Review

மூன்று பருவங்கள், மூன்று தோற்றங்கள் என முதல் படத்திலேயே ஆழமானதொரு வேடம் அறிமுக நடிகர் ருத்ராவுக்கு! இதில் சிறுவனாக வரும் பகுதிகளில் துள்ளலான நடிப்பைக் கொடுத்திருப்பவருக்கு காமெடி கைகொடுத்திருக்கிறது. ஆனால் முதிர்ச்சியான உணர்வுபூர்வமான இடங்களில் அனுபவமின்மை தெரிகிறது. குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டு நடுங்குகிற இடம், அதே ஆக்ரோஷமான குணத்தைத் தனது காதலனிடம் பார்த்து நடுங்குவது ஆகிய இடங்களில் தேவையான நடிப்பைக் கொடுத்து தமிழில் சிறப்பாக அறிமுகமாகியிருக்கிறார் மிதிலா பால்கர். தம்பிக்கு உதவியாக கேமியோ பணியைச் செய்திருக்கும் விஷ்ணு விஷால், 'விஜய்யின் ஜனநாயகன், அஜித்தின் ரேஸிங், சூரி அனுப்பிய மிட்டாய்…' எனத் தமிழ் சினிமாவின் பாப் கல்ச்சர் ரெஃபரன்ஸ்கள் மூலம் ரசிகர்களைக் கைதட்ட வைக்கிறார்.

நாயகனின் நண்பர்களாக நவீன் பிள்ளை, நிவாஷினி நடிப்பில் குறைகளில்லை. படத்தின் மையமான அஷ்வின் - மீராவின் காதல் கதைக்கு, இருவரின் பின்கதையும் நன்றாக உதவியிருக்கிறது. விடலைப் பருவ காதலியாக வரும் வைபவியின் நடிப்பு கவர்ச்சி எபிசோடு! இயக்குநர் மிஷ்கின் மிஷ்கின்னாகவே வரும் இடங்கள் அதகளம். சித்தப்பாவாக கருணாகரன் ஆங்காங்கே ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார். அளவாகப் பேசி காமெடி செய்யும் ரெடின் கிங்ஸ்லி வரும் சில இடங்கள் கலகல!

படத்தின் இளமைத் துடிப்பையும், காதலின் உணர்வுகளையும் அழகாகப் பதிவு செய்கிறது ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு. பருவ மாற்றங்களை ஒளியுணர்வில் கொண்டு வந்திருப்பது சிறப்பு. சிறப்பான 'கட்'களால் அதனைச் சிதைவில்லாமல் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரணவ். இருப்பினும் முதல் பாதியிலிருந்த நேர்த்தி, இரண்டாம் பாதியில் காணவில்லையே என்ற எண்ணம் எழாமல் இல்லை. படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினின் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் ‘ஓஹோ எந்தன் பேபி’ பாடல் இனிமையான மெலோடி. படத்தின் பின்னணி இசை, காதல் காட்சிகளுக்குக் கைகொடுக்கிறது.

Oho Enthan Baby Review

‘சினிமாவுக்குள் சினிமா’ என்ற ஃபார்மேட்டில் காமெடி, காதல், எமோஷன் என்ற பார்முலாவில் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார். இதில் அஷ்வின் தன் கதையைச் சொல்வது, அதை விஷ்ணு விஷால் கேட்பது, இடையிடையே மிஷ்கின் வருவது ஆகிய இடங்கள் எல்லாம் காமெடி ட்ரீட்! முதல் இரண்டு காதல் கதைகளும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப ஜாலியாக சீக்கிரமாக முடிந்தாலும், அதில் தன்பாலின ஈர்ப்பாளர்களை வைத்துவரும் நகைச்சுவையைத் தவிர்த்திருக்கலாம். முதல் பாதி அலுப்படையச் செய்யாமல் செல்ல, இன்றைய இளைஞர்களின் உறவு பிரச்னைகளை நேரடியாக அட்ரஸ் செய்யும் “நீ டாக்ஸிக்” என்று ரெடின் கிங்ஸ்லி சொல்லும் வசனம் முக்கியமானது.

இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடன் மிஷ்கின் ஷூட்டிங் காட்சிகள் கலகலவென சிரிக்க வைத்தாலும், முதல் பாதி அளவுக்கு ரசிக்கும்படியாக இல்லை. எமோஷன் காட்சிகள் அனைத்தும் கிளிஷேக்களாகவே சுருங்கி நிற்கின்றன. இடைவேளை வரை மீராவைத் தவறு செய்யாதவர் என்று காட்டிவிட்டு, பின்பு அவரையே குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி மன்னிப்பு கேட்க வைப்பது எல்லாம் ‘கேஸ் லைட்டிங் பிஹேவியர்’ இயக்குநரே! அதேபோல அஷ்வின் பெற்றோர், மீராவின் அம்மா போன்ற கதாபாத்திரங்களின் வரைவுகள் ஆரம்பத்தில் சரியாகத் தொடங்கப்பட்டு, இறுதியில் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமல் போய்விடுகின்றன. இந்த கதாபாத்திரங்களுக்கு இன்னும் ஆழம் கொடுத்து எழுதியிருக்கலாம்.

Oho Enthan Baby Review
மொத்தத்தில் படம் ஆரம்பித்த எனர்ஜியை இறுதிவரை கொண்டு சென்றிருந்தால் இந்த `ஓஹோ எந்தன் பேபி'யை "நீ வராய் எந்தன் பேபி" என இன்னும் ஜாலியாகக் கொண்டாடி இருக்கலாம்.

Sanjay Dutt: "என்னை லோகேஷ் கனகராஜ் வேஸ்ட் செய்துவிட்டார்; அவர் மீது கோபம்!" - சஞ்சய் தத் கலகல!

சாண்டில்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'கே.டி. தி டெவில்'. 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த கே.வி.என் தயாரிப்பு நிறுவனம்தான் ... மேலும் பார்க்க

Shilpa Shetty: "விஜய் சாருடன் நடனம்; வடிவேலு சார் கற்றுக் கொடுத்த தமிழ்!" - நடிகை ஷில்பா ஷெட்டி

சாண்டில்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'கே.டி. தி டெவில்'. 'ஜனநாயகன்' படத்தை தயாரிக்கும் கே.வி. என் தயாரிப்பு நிறுவனம்தான... மேலும் பார்க்க

Shruti Haasan: "நான் திருமணத்தை மதிக்கிறேன்; ஆனால்..." - நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

நடிகை ஸ்ருதி ஹாசன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்தது குறித்து சமீபத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்..பாட்காஸ்டரான யூடிப்பர் ரன்வீர் அலாபாடியுடன் நடிகை ஸ்ருதி ஹாசன் பாட்காஸ்டில் உரைய... மேலும் பார்க்க

வேள்பாரி: `75 வயசுல... ஸ்லோ மோஷனில் நடந்துவர்ற இந்த ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்காங்கனு..!’ - ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க