தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடியில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மகன் மாதவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் பாலமுருகன் (10), ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த் (8) ஆகிய மூன்று பேரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் மருதகுடி ஊரணி குளத்தில் குளித்துள்ளனர்.
வெகு நேரம் ஆகியும் மாதவன் உட்பட மூன்று ரும் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது அவர்கள் மருதகுடி கிராமத்திற்கு சென்றதாக தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஊரணி குளத்தின் கரையில் சிறுவர்கள் அணிந்திருந்த செருப்புகளை பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடன் அந்த பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தபோது மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. உடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.