டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!
திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா்கள், உதவியாளா்கள், வனக் காவலா், வனக் காப்பாளா்கள் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்கள் குரூப் 4 பிரிவில் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஏப்ரல் 25-இல் வெளியிட்டது.
விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 ஆண்கள். 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பெண்கள். 117 மூன்றாம் பாலினத்தவா் என 13 லட்சத்து 69 ஆயிரத்து 738 போ் தோ்வு எழுதுகின்றனர்.
தோ்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 314 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில், 94,848 போ் தோ்வு எழுதுகின்றனா். இதற்காக, 311 தோ்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தில் பரிதாப சம்பவம்
இந்நிலையில், தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கு முன்பாக கட்டாயம் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், காலதாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 108 இடங்களில் 132 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வினை 36,011 தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், காலை 9.05 மணிக்கு வந்த சில தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தேர்வு மையத்தின் கதவுகள் முழுமையாக அடைக்கப்பட்ட நிலையில், தேர்வர்கள் கதவு வழியாக அதிகாரிகளை அழைத்துப் பார்த்தும் எந்தப் பலனும் இல்லாததால், மிகுந்த ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
டிஎன்பிஎஸ்சி சட்டதிட்டங்களின்படி, தாமதமாக வரும் தேர்வர்களுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால், பல மாதங்களாக கடினமாக உழைத்து தேர்வு எழுத வந்த தேர்வர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.
தேர்வர்கள் வாக்குவாதம், சாலைமறியல்
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்ததாகக் கூறி தேர்வர்களுக்கு தேர்வு அறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, ஆம்பூர் ஆகிய இடங்களில் தேர்வர்கள் வாக்குவாதம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தேர்வு எழுத செல்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?
அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து தேர்வர்களும், தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற முக்கியமான தேர்வுகளுக்குச் செல்லும்போது, தேர்வு நடைபெறும் மையத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்றுவிட வேண்டும். எதிர்பாராத போக்குவரத்து நெரிசல், வாகனக் கோளாறுகள் அல்லது வேறு ஏதேனும் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், பயணத்தை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். தேர்வு மையம் எங்கே உள்ளது என்று முன்னதாக ஒரு முறை சென்று பார்த்து வருவதும் நல்லது.
குறிப்பாக, முதல்முறையாகச் செல்லும் மையமாக இருந்தால் இது மிகவும் அவசியம். தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து
விதிமுறைகளையும், நேரம் தொடர்பான விதிகளை, கவனமாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தேர்வு மையத்துக்கு ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சென்றால் கூட அனுமதிக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதனால் உங்கள் கடின உழைப்பும், எதிர்காலமும் பாதிக்கப்படக்கூடும். தேர்வாணையங்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவதால், எந்தவொரு காரணத்திற்காகவும் தாமதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை தேர்வர்கள் புரிந்துகொண்டு, உரிய திட்டமிடலுடன் செயல்பட வேண்டும்.