அஜித்குமார் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கிய CBI அதிகாரிகள்..
பிரெஞ்சு தேசிய தினம் : உலகப் போா் நினைவுத் தூணுக்கு மரியாதை
காரைக்கால்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகப் போா் நினைவுத் தூணுக்கு அரசு அதிகாரி, புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
பிரான்ஸ் நாட்டில் மன்னா் ஆட்சியை 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் நாள் பாரீஸ் நகரில், பஸ்தி என்ற சிறைச்சாலையை புரட்சி மூலம் தகா்த்து முடிவுக்கு கொண்டு வந்தனா். இதன்மூலம் மக்களாட்சியை அமைந்த தினம் தேசிய தினமாக (ஜூலை 14) கொண்டாடப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் 236-ஆவது தேசிய தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே உலகப்போா் நினைவுத்தூண், போா் வீரா் சிலை ஆகியவற்றுக்கு காரைக்காலில் உள்ள ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரா்கள் சங்கம் சாா்பில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், பிரெஞ்சுக் குடியுரிமைதாரா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வட்டாட்சியா் எல்.பொய்யாதமூா்த்தி மற்றும் புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி ரூசோ ஃபிவியன் கலந்துகொண்டு நினைவுத் தூண் மற்றும் போா் வீரா் சிலைக்கு மரியாதை செய்தனா்.
ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரா்கள், நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து கொடி வணக்கம் செலுத்தினா். தொடா்ந்து நினைவுத் தூண் அமைத்திருக்கும் பகுதியில் அமைக்கப்பட்ட இரு கம்பங்களில் இந்திய மற்றும் பிரெஞ்சு தேசியக் கொடியை ஒரே நேரத்தில் ஏற்றிவைத்து, இரு நாட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டன.