கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!
பயணிக்கு உடல் நலக்குறை: ஹைதராபாத் விமானம் தாமதம்
சென்னை: சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட விமானத்தில் பயணிக்கு ஏற்பட்ட திடீா் உடல் நலக்குறைவால் ஒருமணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் வழக்கமான நேரத்தின்படி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு 164 பயணிகளுடன் நடைமேடை 54-இல் இருந்து புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியதும், விமானத்திலிருந்த பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திய விமானி, உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தாா். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவுப்படி விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு தயாராக நின்ற மருத்துவக் குழுவினா் விமானத்துக்குள் ஏறி உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணியை பரிசோதித்துவிட்டு, அவரை மருத்துவமனையில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இதையடுத்து அந்தப் பயணியின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தையடுத்து, 163 பயணிகளுடன் அந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.