செய்திகள் :

``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முதல்வருக்கு கடிதம்

post image

"சட்டங்கள் புத்தகத்தில் இருப்பது மட்டுமன்று, அதனைப் பாரபட்சமின்றி நிறைவேற்றுவதே இன்றையத்தேவை" என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு காவல்துறை வன்முறைக்கெதிரான கூட்டியக்கத்தின் சார்பில் கடிதம் எழுதியுள்ளனர்.

மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன், எஸ்.வி.ராஜதுரை, கொளத்தூர் மணி, வசந்திதேவி, ஹென்றி திபேன், ப.பா.மோகன், அ.மங்கை உள்ளிட்ட 151 எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கையெழுத்திட்டுள்ள செயல்பாட்டாளர்கள்

அக்கடிதத்தில், "வணக்கத்திற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, கடந்த ஜூன் 28 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்ட வழக்கு தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

காவல்துறையின் வன்முறை என்பதும், விசாரணையின்போது நடக்கின்ற சித்திரவதைகளையும் சட்ட விரோதமானது என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறிவந்த போதிலும் கீழ்மட்டத்திலுள்ள காவலர்களிலிருந்து உயரதிகாரிகள் வரை சீரூடை அணிந்து ஆயுதம் ஏந்தியிருப்பதே, வன்முறை பிரயோகிக்கத்தான் என்றும், சித்திரவதைக்குள்ளாக்காமல் உண்மையை வரவழைக்க முடியாது என்கிற ஆழமான நம்பிக்கை இருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 31 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக 'மக்கள் கண்காணிப்பகத்தின்' ஆய்வறிக்கை கூறுகின்றது. 8 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் மிகக்குறைந்த சதவிகிதம் என்று இதனை ஒதுக்கிட இயலாது. சமீப காலமாக விசாரணைக் கைதிகளின் கை கால்களை உடைத்து, மாவுக்கட்டுடன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துதல் என்பது இயல்பான நடைமுறையாக மாறியிருக்கின்றது. அவ்வப்போது நிகழ்கின்ற காவல் மரணங்கள் அனைத்தும் காவல்நிலைய விசாரணையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது.

அஜித்குமார் கொலை விவகாரம்

1984 ஆம் ஆண்டு ஐ.நா.சபையால் நிறைவேற்றப்பட்ட சித்திரவதைக்கெதிரான உடன்படிக்கையில் “ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற அல்லது தண்டிக்க அல்லது அச்சுறுத்த ஓர் அரசு அதிகாரியின் தூண்டுதலால் அல்லது ஒப்புதலின் பெயரால் உடல்ரீதியாக அல்லது மனரீதியாக வலியை ஏற்படுத்துவது சித்திரவதை” என்கிறது.

மேற்கூறிய சித்திரவதைக்கு எதிரான ஐ.நா.வின் உடன்படிக்கையில் இந்தியா ஒப்பமிட்டுள்ள போதிலும் அதனை ஏற்புறுதி செய்யவில்லை. அதனால் சித்திரவதை என்பது இந்தியச் சட்டங்களில் விளக்கப்படாததோடு அது ஒரு தண்டனைக்குரிய குற்றமென்று தண்டனைச் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவிலும் குறிப்பிடப்படவில்லை. தனியான சட்டங்களும் இயற்றப்படவில்லை. அதே சமயம், ஒன்றிய அரசின் இந்த திட்டமிட்ட புறக்கணிப்பு, மாநில அளவிலான சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை இயற்றுவதற்குத் தடையும் ஆகாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறவோ, பொருளைத் திரும்பப்பெறுவதற்கோ சட்ட விரோதமாக அடைத்து வைப்பது மூன்றாண்டு சிறைத்தண்டனைக்குரிய குற்றம் என புதிய பி.என்.எஸ் பிரிவு 125(8) கூறுகின்றது. எனினும் இப்பிரிவு மட்டும் போதுமானதல்ல, தனிச் சட்டம் அவசியமாகிறது.

அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசின் அணுகுமுறை, குறிப்பாக 'காவல்துறையின் தரப்பில் தவறும் குற்றமும் நிகழ்ந்துள்ளது' என ஏற்றுக் கொண்டு தொடரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.

அதேசமயம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் எங்களிடம் போதிய அதிகாரிகள் இல்லை என்று கடந்த ஏழு ஆண்டுகளாக விசாரணையை நீட்டிக்கின்ற மத்தியப் புலனாய்வுத்துறையிடம் (CBI) தாங்களாக வழக்கை ஒப்படைத்திருப்பது, தமிழகக் காவல்துறையிலுள்ள உயரதிகாரிகளின் ஒருமைப்பாட்டைப் (Integrity) புறந்தள்ளுவதாக அமைந்துவிட்டது.

அஜித்குமார் வழக்கில் பதில் இல்லாத பல கேள்விகள் உள்ளன. இந்தச்சூழலில் கீழ்கண்ட வேண்டுகோள்களைச் சமர்ப்பிகின்றோம், சித்திரவதை, காவலில் மரணம், கொலை போன்ற குற்றங்களைக் கையாளுவதற்குத் தனியானதொரு சட்டம் இயற்றக் கோருகின்றோம். விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரிகளாகவும் இருப்பது, தவறான முதல் தகவல் அறிக்கை பதிவதுமான நிலையைத் தவிர்க்க காவலர்கள் அல்லாத தனி அமைப்பு தேவை. அரசு வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுப்பது போல, சட்டம் பயின்றவர்களை அதற்காக நியமிக்கலாம். காவல்துறை வன்முறை நிகழ்வுகளில் அப்பகுதி உயர் அதிகாரிகளும் அந்நிகழ்வுக்கு பெறுப்பேற்கும் வகையில் வழக்குகள் பதிவு செய்வது அவசியம்.

காவல் நிலைய சித்திரவதை

அரசு அதிகாரிகளுக்கெதிராக லஞ்ச ஒழிப்பு சட்டம் இருப்பது போல, காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் சித்திரவதைக் குறித்த முறையீடுகளை விசாரிப்பதற்கென்று காவல்துறை சாராத விசாரணை முகமை மற்றும் நீதிவழங்கும் அமைப்புகள் தேவை என்று கருதுகிறோம்.

சித்ரவதைகளை பயன்படுத்தும் காவலர்களின் பணிப் பதிவேட்டில் அதை பதிய வேண்டும், அவரின் பணி உயர்வுக்கு முன் இவைகள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும், காவல்நிலையத்தில் சி.சி.டி.வி கேமரா அவசியம் இருக்க வேண்டும். சித்ரவதையை தொடர்ந்து நிகழ்த்தும் காவலர்கள் மீது உரிய குற்ற நடவடிக்கை மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுப்பதுடன் அவர்கள் கட்டாயம் உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

சித்ரவதை தொடர்பாக வரும் புகார்களை வெளிப்படைத் தன்மையுடன் உடனடியாக விசாரணை நடத்த சுதந்திரமான நிபுணர்கள் குழு அமைக்கப்படவேண்டும்.

முதல்வருக்கு வலியுறுத்தல்

அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ விசாரித்து நடவடிக்கை எடுத்துவிடும் என்று இருந்துவிடாமல், நமது தரப்பில் நடந்துள்ள தவறுகள் என்னவென்று அறியும் முயற்சியும் தமிழக அரசின் தரப்பில் (Internal enquiry) தேவை என்று கருதுகிறோம்.

அஜித்குமார் வழக்கில் நகை பறிகொடுத்ததாகக் கூறும் நிகிதா என்பவரின் புகார் பதிவு செய்யப்படாமலே விசாரணையும் சித்திரவதையும் நடந்துள்ளது.

அஜித்தின் மரணம் குறித்து தலைமைக்காவலர் கொடுத்த புகார் தங்களின் குற்றப் பொறுப்பிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியும், முற்றிலும் தவறான தகவல்களைக் கொண்டதுமாகும். அஜித் கொலைக்கு வழக்கை எதிர்கொள்வது போல தவறான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான ஐந்தாவது போலீஸ் ஆணையம் மூன்றாண்டு விசாரணைக்குப் பிறகு நீண்டகால மாற்றங்களுக்கான பரிந்துரைகளை அளித்துள்ளது. இது குறித்து நடைமுறை யதார்த்தத்தில் கண்டு உணரத்தக்க மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். மேலும் கூடுதலான பரிந்துரைகள் தேவையா என்பதை அறிய மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து அதை மேலும் செழுமைப்படுத்தும் செயல்பாடும் உடனடித் தேவையாகின்றது.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் வலியுறுத்தும் உயிர்வாழ் உரிமை, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் நியமனம், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு தேவை என்று கருதுகிறோம்.

சட்டங்கள் புத்தகத்தில் இருப்பது மட்டுமன்று, அதனைப் பாரபட்சமின்றி நிறைவேற்றுவதே இன்றையத்தேவை என்பதை எமது காவல்துறை வன்முறைக்கெதிரான கூட்டியக்கத்தின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நாங்கள் கூறிய எதுவும் தாங்கள் அறியாததல்ல. எனினும் எமது ஜனநாயகக் கடமை என்பதால் இம்மடலைச் சமர்ப்பிக்கின்றோம்" என்றும் தெரிவித்துள்ளனர்.

`நடிகர் சஞ்சய் தத் நினைத்தால் மும்பை குண்டு வெடிப்பு நடந்திருக்காது' -உஜ்வல் நிகம் எம்பி சொல்வதென்ன?

1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 267 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தார். இக்குண்டு வெடிப்பை நடத்திய தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான்... மேலும் பார்க்க

``அண்ணாமலை அண்ணா.. என் உயிரை காப்பாற்றுங்கள்” - வைரலாகும் பாஜக நிர்வாகியின் வீடியோ

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகிலுள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர், அப்பகுதியில் டூவீலர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். அத்துடன் பா.ஜ.கவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவிலும... மேலும் பார்க்க

'மணல் அள்ளும் பிரச்னையில் ஒருவர் கொலை; `பின்னணியில் கரூர் கேங்?’ காட்டமான அண்ணாமலை - நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், வாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர், வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவரது அனுபவ பாத்திரத்தில் இருந்த 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த இடத்துக்கு அருகே வெங்கடேஷ... மேலும் பார்க்க

`சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த 36 வயது பெண், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு வந்தார். அப்போது, அதே கம்பெனியில் வேலைப் பார்த்துவந்த கேரள மா... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மலம்; மது போதையில் அட்டூழியம்.. 4 பேரிடம் விசாரணை

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தநிலையில், பள்ளியில் உ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கிய CBI அதிகாரிகள்..

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த மாதம் 28 ஆம் தேதி திருட்டுப் புகாரில் தனிப்படை காவல்துறையினர் சட்டவிரோதக் காவலில் எடுத்து சித்திரவதை செ... மேலும் பார்க்க