டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டது!
இந்தியாவின் வணிகத் தலைநகராக விளங்கும் மும்பையில், டெஸ்லாவின் முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் இன்று தனது முதல் விற்பனையகத்தை திறந்திருக்கிறது.
இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தடம் பதித்துள்ளது. டெஸ்லாவின் இந்திய வருகை வா்த்தக ரீதியாக மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு பக்கம், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த எலான் மஸ்க், இப்போது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார்.
இதற்கிடையே, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் காா்களை விற்பனை செய்யலாம். ஆனால், அங்கு உற்பத்தி ஆலையை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு இழைக்கும் அநீதியாக இருக்கும்’ என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துப் பேசியிருந்தார்.
இந்தியா்கள் டெஸ்லா நிறுவனக் கார்கள் மீது எந்த அளவுக்கு ஆா்வம் காட்டுவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே டாடா, மஹிந்திரா, ஹுண்டாய், பிஒய்டி, எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் மின்சார வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. பெட்ரோலிய பொருள்களின் இறக்குமதியைக் குறைக்க இந்தியாவில் மின்சார வாகனங்களை அதிகரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்தச் சூழலில் உலகின் மிகப்பெரிய வாகனச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் டெஸ்லா களமிறங்குகிறது.
டெஸ்லா காா்களுக்கு சில வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என்று டெஸ்லா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மற்ற வெளிநாட்டு நிறுவனங்களும் இதேபோன்ற சலுகையைக் கோரும் என்பதால் மத்திய அரசு அதனை ஏற்கனவே நிராகரித்திருந்தது குறிப்பிடத்தகக்து.