கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை ஊக்குவித்த சுபான்ஷு சுக்லா: மோடி
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் கீழ் சென்ற 3 விண்வெளி வீரா்களும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பினர்.
விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம், பசிபிக் கடலில், கலிஃபோர்னியா அருகே பத்திரமாக இறங்கியது. சுபான்ஷு சுக்லாவை அழைத்து வந்த டிராகன் விண்கலம், பத்திரமாக கடலில் இறங்கியதை நேரலையில் பார்த்த அவரது பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். நால்வரும் பத்திரமாக இருப்பதாக நாசாவும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சுபான்ஷு சுக்லாவை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மோடி தெரிவித்திருப்பதாவது:
வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பும் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை நாட்டு மக்களுடன் இணைந்து நானும் வரவேற்கிறேன்.
சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்வையிட்ட முதல் இந்திய விண்வெளி வீரராக, அவரது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடி மனப்பான்மையின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார்.
நமது நாட்டின் மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டத்தை நோக்கிய மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.