அவதூறு வழக்கில் ஆஜராக லக்னௌ வந்தடைந்தார் ராகுல்!
அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி லக்னௌ வந்தடைந்தார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய வீரர்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பானது லக்னௌ நீதிமன்றத்துக்கு வந்துள்ளதாக ராகுலின் வழக்குரைஞர் பிரன்ஷு அகர்வால் கூறினார்.
ராகுல் காந்தி பிற்பகல் 1 மணியளவில் லக்னௌ விமான நிலையத்தை அடைந்ததாகவும், கட்சியின் மாநில பிரிவுத் தலைவர் அஜய் ராய், பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே ஆகியோருடன் சிறப்பு எம்பி எம்எல்ஏ நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்ட பிறகு ராகுல் காந்தி பிற்பகலில் தில்லி திரும்ப உள்ளார். அடுத்த சில நாள்களில் தனது தொகுதியான ரேபரேலியைப் பார்வையிட அவர் மீண்டும் உத்தரப் பிரதேசத்திற்கு வர வாய்ப்புள்ளது என்று அஜய் ராய் தனியார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராகுல் காந்தி நீதிமன்றத்துக்கு வருவதால் நீதிமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
எல்லைச் சாலைகள் அமைப்பின் ஓய்வுபெற்ற இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா தாக்கல் செய்த புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராகுல் காந்தியை குற்றம் சாட்டப்பட்டவராக அழைப்பாணை அனுப்பியது.
டிசம்பர் 16, 2022 அன்று, பாரத் ஜோடோ யாத்திரையின்போது பல்வேறு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் உரையாற்றிய ராகுல், டிசம்பர் 9 (2022) அன்று அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலைப் பற்றிக் குறிப்பிட்டு, சீன வீரர்கள் நமது வீரர்களை அடித்தது பற்றி ஒரு முறைகூட கேட்க மாட்டார்கள் என்று கூறியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சீன வீரர்கள் இந்திய வீரர்களை அடித்ததாகக் கூறப்படுவது குறித்து காந்தியின் அறிக்கையால் தனது உணர்வுகள் புண்பட்டதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டினார். பிப்ரவரி 11 அன்று, அவதூறு குற்றச்சாட்டில் ராகுலுக்குச் சம்மன் அனுப்பச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.