"ஹாலிவுட் போல சண்டைக் காட்சிகள்; மோகன் ராஜ் போல இனி யாரும் பலியாகக் கூடாது" - தய...
டிராகன் விண்கலத்தின் கதவுகள் திறப்பு! வெளியே வந்த வீரர்கள்!
கலிஃபோர்னியா அருகே கடலில் இறங்கிய டிராகன் விண்கலம், மீட்புப் படகில் ஏற்றப்பட்டு, விண்கலத்தின் கதவுகள் திறக்கப்பட்டன். அதலிருந்து வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.
இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவுடன் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின்கீழ் சென்ற 4 விண்வெளி வீரா்களும் சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மூலம் இன்று பிற்பகலில் கடலில் இறங்கியது.
திட்டமிடப்பட்ட நேரத்துக்கு மாறாக 10 நிமிட தாமதத்துடன் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மாலை 4:45 மணிக்கு (இந்திய நேரப்படி) சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து, பூமி நோக்கிப் புறப்பட்டது.
இன்று பிற்பகலில், அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் பத்திரமாக இறங்கியது.
விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டு பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த விண்கலம், பாராசூட்களின் உதவியுடன் மெல்ல வேகம் குறைக்கப்பட்டு ‘ஸ்பிளாஷ் டௌன்’ முறையில் கடலில் இறக்கப்பட்டது. பாராசூட்கள் இரண்டு கட்டங்களாக விரிந்தன. முதலில், விண்கலத்தை நிலைப்படுத்தும் பாராசூட்கள் சுமாா் 5.7 கி.மீ. உயரத்தில் விரிந்து, விண்கலத்தின் வேகத்தைக் குறைத்தது. அதைத் தொடா்ந்து இரண்டு கி.மீ. உயரத்தில் மேலும் சில பாராசூட்கள் விரிந்து, விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்க உதவின.
இதனை நேரலையில் சுபான்ஷு சுக்லா பெற்றோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். மகன் தரையிறங்கியதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
கடலில் தயராகக் காத்திருந்த மீட்புக் குழுவினா், வீரா்கள் இருக்கும் விண்கலத்தின் முனைப் பகுதியை மீட்புப் படகுக்கு அருகே கொண்டு சென்றனர். பின்னா், படகுக்குள் விண்கலத்தை வைப்பதற்கான கட்டமைப்புக்குள் விண்கலத்தை வைத்தனர். அதன் கதவை உள்ளிருந்தும், வெளியே இருந்தும் திறந்து, வீரா்களை ஒவ்வொருவராக வெளியே அழைத்து வருகிறார்கள்.