``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - காங்கிரஸ் கேள்வி
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி' மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் சேர்ந்து எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை குறிவைத்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
இந்த நிலையில், பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் செய்தியாளர்களிடம், ``மியான்மர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கும்போது, மக்களவைத் தேர்தல் எப்படி சட்டப்பூர்வமானதாகவும், சரியானதாகவும் இருக்க முடியும்? அந்த வெற்றி செல்லுமா? கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் என்ன செய்துகொண்டிருக்கிறார். கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்கிறது?
இந்தக் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா? இதன் மூலமே தெரியவில்லையா, அவர்களின் நோக்கங்கள் மோசமானவை. அவர்கள் தேர்தல்களில் மோசடி செய்ய விரும்புகிறார்கள். ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் வாக்குகளை வெட்டி போலி வாக்காளர்களின் பட்டியலைத் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மகாராஷ்டிரா போன்ற ஒரு மாதிரி தயாரிக்கப்பட்டு வருகிறது." என்றார்.