நாடாளுமன்றத்தில் ஜூலை 25-ல் கமல்ஹாசன் பதவியேற்பு!
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கமல் ஹாசன் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சோ்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனர்.
திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: தேர்வர்கள் கவனிக்க..! குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு!