தமிழகம் ஓரணியில் இருக்கும்போது தில்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது: மு.க. ஸ்டாலின்
சிதம்பரம்: ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஓரணியில் இருக்கும்போது, எந்த தில்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டதன் அடிப்படையில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் லால்புரத்தில் சிதம்பரம் புறவழிச்சாலையில், இளையபெருமாள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அா்ப்பணித்தவரும், கடலூா் மாவட்டத்திற்கு பெருமை சோ்த்தவருமான எல்.இளையபெருமாளைச் சிறப்பிக்கும் வகையில், அவரது முழுவுருவ சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அருகே அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய சிறப்புரையில், இளையபெருமாள் தொடர்ந்து போராடியதன் காரணமாகவே, ஆதி திராவிடர் மக்களுக்கு எழுச்சி ஏற்படக் காரணமாக இருந்தது என்று கூறினார்.
அரசின் சேவைகள் அனைத்தையும் மக்களைத் தேடி வழங்குவதுதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். மக்களின் உரிமைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் பாடுபட்டவர் இளையபெருமாள். இளையபெருமாள் தொடர்ந்து போராடியதன் காரணமாகவே, ஆதி திராவிடர் மக்களுக்கு எழுச்சி ஏற்படக் காரணமாக இருந்தது. பட்டியலின மக்கள் உரிமைகளுக்கான வாசலை திறந்தவர். தமிழ்நாடு வரலாற்றிலேயே பட்டிலின மக்களுக்கு அதிக திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தகுதி இருந்தும் இதுவரை மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வந்து விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் கிடைக்கும் என்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு ஓரணியில் இங்கு இருக்கும்போது எந்த தில்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது. சிதம்பரத்தில் சீர்திருத்தப் பிள்ளையாக திருமாவளவன் இருக்கிறார். மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று சேவை திட்டங்களை வழங்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
உங்களுடன் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கிவைத்துள்ளார்.