தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம...
'மணல் அள்ளும் பிரச்னையில் ஒருவர் கொலை; `பின்னணியில் கரூர் கேங்?’ காட்டமான அண்ணாமலை - நடந்தது என்ன?
கரூர் மாவட்டம், வாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர், வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவரது அனுபவ பாத்திரத்தில் இருந்த 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த இடத்துக்கு அருகே வெங்கடேஷ் என்பவரது நிலம் இருந்துள்ளது. இந்நிலையில், மணிவாசகம் இடத்தில் வெங்கடேஷ் மணல் அள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த ராணி குடும்பத்தினர், இதுப்பற்றி மணிவாசகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால், மணிவாசகம் தனது தம்பி குட்டி என்கிற யூகேஸ்வரன் மற்றும் உறவினர் ஆனந்த் ஆகியோரோடு சேர்ந்து சென்று வெங்கடேஷிடம் தனது இடத்தில எப்படி மண் அள்ளலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 'எதுவாக இருந்தாலும் நாளை காலை இடத்தை அளக்கலாம். அதன்பிறகு எல்லையை பார்த்துக்கொள்ளலாம்' என்று மணிவாசகம் சொல்லியுள்ளார். ஆனால், வெங்கடேஷ் தரப்பினர் அரிவாளால் மணிவாசகம், யூகேஸ்வரன், ஆனந்த் ஆகிய மூன்று பேரையும் வெட்டியுள்ளனர். அவர்களோடு அங்கு நின்ற ராணி மற்றும் அவரது தாய் ராசம்மாளையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது.
அதன்பிறகு, வெங்கடேஷ் தரப்பினர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிந்த வாங்கல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த மூன்று பேரையும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மணிவாசகம் உயிரிழந்தார். அதேபோல், ஆபத்தான நிலையில் இருந்த குட்டி என்கிற யூகேஸ்வரன், ஆனந்த ஆகியோரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ராணி மற்றும் அவரது தாய் ராசம்மாள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெங்கடேஷ் உள்ளிட்ட குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
காட்டமான அண்ணாமலை
இந்நிலையில், பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இந்த கொலை சம்பவம் குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் காட்டமாக அறிக்கை வெளியிட்டு கண்டித்துள்ளார். அதில்,
``கரூரில், மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த மணிவாசகம் என்பவர், வாங்கல் வெங்கடேஷ் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளலாம், அதனைத் தடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று, தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது, அனைவருக்கும் நினைவிருக்கும்.

இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாங்கல் வெங்கடேஷ் என்ற நபர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று தெரியவருகிறது. கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்திலேயே வைத்து வெட்டிக் கொலை செய்ததும் இதே தி.மு.க ஆட்சியில்தான்.
கரூர் கேங்
தற்போது, இன்னொரு கொலை. மணல் கொள்ளையைத் தடுத்தால் கொலை செய்வோம் என்று பொதுமக்களுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் இது. சட்டத்தைக் குறித்துச் சிறிதும் பயமின்றி, கொலை செய்யும் அளவுக்கு மணல் கொள்ளையர்களின் அராஜகம் அத்துமீறியிருக்கிறது என்றால், அவர்கள் பின்னணியில் கரூர் கேங் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?.

மணிவாசகம் இறப்பிற்கு நீதி வேண்டும். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள், மணல் கொள்ளையின் பின்னணியில் இருப்பவர்கள் என அனைவரும், சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையேல், கரூர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினை தி.மு.க அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.