விண்வெளியிலிருந்து தரையிறங்கிய டிராகன் விண்கலம் - புகைப்படங்கள்
``மறுக்கப்படும் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை..?'' - தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
"எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழஙகாமல் தாமதித்தும், பெயர்களை நீக்கியும் வஞ்சிக்கிறது" என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டித்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், "1954-1955 ம் ஆண்டில் தொடங்கப்பபட்ட NOS (National Overseas Scholarship) திட்டத்தின் கீழ் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், குற்றப் பழங்குடிகள் என்று அறிவிக்கப்பட்ட நாடோடி பழங்குடியினர் (DNT), அரை நாடோடி பழங்குடியினர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் அல்லது பாரம்பரிய கைவினைஞர் பிரிவுகளைச் சேர்ந்த, குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2025-26 கல்வியாண்டில் வெளிநாடு சென்று படிப்பதற்கான உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சி/எஸ்.டி ஏழை மாணவர்கள் 106 பேரில் 40 பேருக்கு மட்டுமே உதவித்தொகையை வழங்கியுள்ளது.
இது மட்டுமல்ல, கிறிஸ்துவ, இஸ்லாமிய, புத்த, ஜைன, சீக்கிய, பார்சி இன மாணவர்களுக்கு வழங்கப்படுகிற மௌலானா ஆசாத் தேசிய உதவித் தொகை திட்டத்தில் (MANF), 1400-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவர்கள் பல மாதங்களாக உதவித்தொகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதே போல் பட்டியல் சாதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேசிய கல்வி உதவித் தொகைக்கான பட்டியலே ஏப்ரல் 2025 வரை வெளியிடப்படாமல் தாமதிக்கப்பட்டது. அதில் கூட, முதலில் தேர்வு செய்யப்பட்ட 806 மாணவர்களில் 487 மாணவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது மாணவர்களின் உயர் கல்விக்கு எதிரான சதிச்செயலாகும்.
எஸ்.சி/எஸ்.டி ஏழை, குற்றப்பழங்குடிகள், சிறுபான்மை மாணவர்களின் கல்வி நலன்களுக்கு எதிரான இத்தகைய தீய நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளனர்.