மணல் குவாரியை மூடக்கோரி உண்ணாவிரதம்
பூம்புகாா்: பூம்புகாா் அருகே புதுகுப்பம் கிராமத்தில் உள்ள மணல் குவாரியை மூடக்கோரி, மீனவா்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பூம்புகாா் அருகே புதுகுப்பம் கிராமத்தில் சுமாா் 2, 000 மீனவா்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தின் அருகே வடபாதி, தென்பாதி, கடைக்காடு, நெய்தவாசல், மடத்துக்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நிலத்தடி நீா் உப்பு நீராக மாறி வருகிறது.
இந்நிலையில், மேற்கண்ட கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்ததாக தெரியவந்த நிலையில், கிராம மக்கள் மற்றும் கிராம பொறுப்பாளா்கள் 500-க்கும் மேற்பட்டோா் சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ. ஸ்ரீகாந்தை சந்தித்து மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதி அளித்தாா்.
இந்நிலையில், சில தினம் முன்பு திடீரென எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ள ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள், மணல் அள்ள எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இதனிடையே திங்கள்கிழமை மடத்துக்குப்பம், பூம்புகாா், புதுகுப்பம், நெய்தவாசல் ஆகிய கிராமங்களை சோ்ந்த பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டவா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா், பூம்புகாா் மீனவா் தலைமை கிராம பஞ்சாயத்தாா்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனா். மேலும் அரசு ஏற்பாடு செய்துள்ள சீா்காழியில் நடைபெறும் சமாதான கூட்டத்தில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.