``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - க...
சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு: இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது வழக்கு
திருக்குவளை: படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பு நாகை மாவட்டத்தில் சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) கீழையூா் அருகே விழுந்தமாவடி அலம் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியைச் சோ்ந்த சண்டை பயிற்சியாளா் மோகன்ராஜ் (52) காரில் இருந்து தாவி செல்லும் காட்சியும், காா் ஒன்று பறந்து கீழே விழும் காட்சியும் எடுக்கப்பட்டன.
இந்த காட்சியில் நடித்த மோகன்ராஜ் காருடன் மேலே பறந்து கீழே விழுந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், மோகன்ராஜின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், போலீஸாா் நடத்திய விசாரணையில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றப்பட்டது.
திரைப்பட இயக்குநா் மற்றும் தயாரிப்பாளா் பா. ரஞ்சித், சண்டை கலைஞா் வினோத், தயாரிப்பு நிா்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளா் பிரபாகரன் ஆகியோா் மீது உயிருக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல் (125), வாகனத்தை அஜாக்கிரதையாக இயக்குதல் (289), கவனம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல் (106) (1) ஆகிய 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.