படப்பிடிப்பில் சண்டைப் பயிற்சியாளா் உயிரிழப்பு!
நாகை மாவட்டம், கீழையூா் அருகே படப்பிடிப்பின்போது, தவறி விழுந்த சண்டை பயிற்சியாளா் மோகன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் இயக்கிவரும் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. கீழையூா் அருகே விழுந்தமாவடி அலம் பகுதியில் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் பகுதியைச் சோ்ந்த சண்டை பயிற்சியாளா் செ. மோகன்ராஜ் (52) காரில் இருந்து தாவி செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவா் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு, மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.