Sneha Debnath: 6 நாள்களுக்குப் பின் யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி.. என்ன நடந்தது?
டெல்லியில் உள்ள ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த மாணவி ஸ்நேகா தேவ்நாத் (Sneha Debnath) (19) கடந்த ஆறு நாள்களாக காணவில்லை.
அவரது குடும்பத்தினர், இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸாரும் ஸ்நேகாவை தேடி வந்தனர்.
போலீஸாரின் விசாரணையில், ஸ்நேகா டாக்சியில் வடக்கு டெல்லியில் உள்ள சிக்னேச்சர் மேம்பாலத்திற்கு சென்றறுள்ளார். மொபைல் போன் சிக்னலை ஆய்வு செய்தபோதும் அவர் சிக்னேச்சர் மேம்பாலத்திற்கு அருகில்தான் கடைசியாக இருந்துள்ளார். டாக்சி டிரைவர் ஸ்நேகாவை மேம்பாலத்தில் இறக்கிவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, யமுனை ஆற்றில் ஸ்நேகாவை போலீஸார் தேட ஆரம்பித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையும், போலீஸாரும் வடக்கு டெல்லி நிகம் போத் கேட் பகுதியில் இருந்து நொய்டா வரை ஆற்றில் தேட ஆரம்பித்தனர்.
இதில் சிக்னேச்சர் மேம்பாலத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் யமுனை ஆற்றில் ஸ்நேகாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்நேகா கடந்த 7-ம் தேதி காணாமல் போனார். 6 நாள்கள் கழித்து அவரது உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ஸ்நேகா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அவர் குடும்ப பிரச்னையில் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சிக்னேச்சர் மேம்பாலத்தில் அவர் நின்றதை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் காணாமல் போய்விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

டாக்சி டிரைவரும் ஸ்நேகாவை மேம்பாலத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். காணாமல் போன அன்று ஸ்நேகா தனது நெருங்கிய தோழிகளுக்கு இமெயில் அனுப்பி இருக்கிறார். அவரது தோழியிடம் விசாரித்தபோது ஸ்நேகா கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்''என்று தெரிவித்தனர்.
ஆனால் ஸ்நேகாவை யாராவது கடத்தி சென்று இருக்கவேண்டும் என்று அவரது சகோதரி பிபஸ்ஹா தெரிவித்துள்ளார்.