ChatGPT உதவியுடன் 46 நாள்களில் 11 கிலோ எடையை குறைத்த யூடியூபர் - எப்படி தெரியுமா...
கடும் நிதித் தட்டுப்பாடு - மதுக்கடை திறந்து ரூ.14,000 கோடி திரட்ட மகா., அரசு முடிவு!
மகாராஷ்டிரா அரசு கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. அரசு ஒப்பந்ததாரர்களுக்குக்கூட சரியாக பணம் கொடுக்கவில்லை என்று அரசு ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மொத்தம் ரூ.90 ஆயிரம் கோடி அளவுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு அரசு பாக்கி வைத்திருக்கிறது. இதையடுத்து நிதி நெருக்கடியை சமாளிக்க கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மதுபானங்களின் விலையை மாநில அரசு கடுமையாக அதிகரித்தது. இதற்கு பீர் பார் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் பீர் பார் உரிமையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் பெண்களுக்கு முக்கிய மந்திரி லட்கி பெஹின் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு நிதி திரட்ட வரியை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில அமைச்சர் சகன் புஜ்பால் தெரிவித்துள்ளார்.
புதிய வருவாயை அதிகரிக்க ஆலோசனை வழங்க மாநில அரசு மதுபான கொள்கை சீர்திருத்த கமிட்டி ஒன்றை நியமித்து இருந்தது. அக்கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், அக்கமிட்டியின் பரிந்துரைப்படி அடுத்த கட்டமாக புதிதாக மதுபானக்கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கி அதன் மூலமும் நிதி திரட்ட மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
1974-ம் ஆண்டு மாநில அரசு மதுபானக்கடைகளுக்கு லைசென்ஸ் கொடுப்பதை நிறுத்தி வைத்தது. அதன் பிறகு புது மது கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் பீர் பார்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் அனைத்து இடங்களிலும் பீர் பார்கள் இருக்கிறது.
மதுவிற்பனை மூலம் மாநில அரசுக்கு தற்போது ஆண்டுக்கு ரூ.43 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது. புதிதாக 328 மதுபானக்கடைகளை திறக்க அனுமதி கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கூடுதலாக திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாராமதி மாவட்டத்தில் தான் அதிக அளவில் மதுபான தொழிற்சாலைகள் இருக்கிறது. அப்படி இருக்கும்போது கலால் வரித்துறை அமைச்சரான அஜித் பவார் இப்போது மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்திருப்பது குறித்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. அரசு நியமித்த மதுபான சீர்திருத்த கமிட்டிக்கும் அஜித் பவார்தான் தலைவராக இருக்கிறார். எனவே புதிய மதுபானக்கடைகள் வழங்கப்படுவதில் அஜித் பவார் ஆதரவாளர்கள்தான் பயனடைவார்கள் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

புதிய மதுபானக்கொள்கைப்படி மாநிலத்தில் உள்ள மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை 19 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1713 கடைகள் இருக்கிறது.
1970-ம் ஆண்டில் இருந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இதற்கு முன்பு இக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. தற்போது பழைய ஒயின் ஷாப் லைசென்ஸ்களை விலைக்கு வாங்குவதாக இருந்தால் அதற்கு ரூ.10 கோடி செலவாகிறது. ஆனால் புதிய லைசென்ஸ் வாங்க திரும்ப கொடுக்கப்படாத ஒரு கோடி முன்பணம் செலுத்தி வாங்க முடியும். அதேசமயம் வருடத்திற்கு ரூ.35 கோடி லைசென்ஸ் கட்டணமாக செலுத்தவேண்டி இருக்கும்.
அண்டை மாநிலத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 6 மதுபானக்கடைகள் இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் 1.5 லட்சம் மக்களுக்கு 6 மதுபானக்கடைகள் இருக்கிறது. எனவே அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்று கலால் வரித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராஜ்கோபால் தெரிவித்தார்.