உக்ரைன் போர்: ரஷியாவுக்கு அமெரிக்கா 50 நாள்கள் கெடு! இல்லாவிட்டால்...
நச்சு வாயுவை பிரித்தெடுப்பதில் இருந்து 78% அனல் மின் நிலையங்களுக்கு விலக்கு!
நச்சுத்தன்மை வாய்ந்த துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவுவதில் இருந்து நாட்டின் 78% அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
அனல் மின் நிலையங்களில், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்போது சல்பர் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த துகள்கள் புகைப்போக்கி வழியாக வெளியேறும். இவை காற்றில் கலந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும்.
அனல் மின் நிலையங்களின் புகைப்போக்கியில் இருந்து வெளியேறும் சல்பர் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முறைக்கு ஃபுளு கேஸ் டி-சல்பியூரிசேசன் எனப் பெயர். காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக உலகளாவிய அனல் மின் நிலையங்களில் இந்த முறை பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''ஒரு மில்லியன் (10 லட்சம்) அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களின் 10 கி.மீ. சுற்றளவுக்கு வெளியே உள்ள அனல் மின் நிலையங்கள் இந்த முறையை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக நச்சுத் துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இவை காற்று மாசுபாட்டிற்கே வழிவகுக்கும்.
78% அனல் மின் நிலையங்களுக்கு விலக்கு
நாட்டில் 180 அனல் மின் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு அனல் மின் நிலையத்திலும் பல்வேறு அலகுகள் செயல்பட்டு வருகின்றன.
நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களின் 11 சதவீதம் அல்லது 600 அலகுகள், குறைந்தது 10 லட்சம் மக்கள் தொகை உடைய தலைநகர் அல்லது நகரத்துக்கு 10 கி.மீ. தொலைவுக்குட்பட்டு உள்ளன. இவை ஏ பிரிவைச் சேர்ந்தவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பின்படி, இவை கட்டாயம் நச்சு வாயுவைப் பிரித்தெடுக்கும் ஃபுளு கேஸ் டி-சல்பியூரிசேசன் முறையை நிறுவியிருக்க வேண்டும்.
மற்றொரு 11 சதவீத அனல் மின் நிலைய அலகுகள், கடுமையாக மாசடைந்துள்ள பகுதிகள் அல்லது பின்தங்கிய கிராமப் புறப் பகுதிகளுக்கு 10 கி.மீ. தொலைவுக்குட்பட்டு உள்ளன. இவை பி பிரிவு வகையைச் சேர்ந்தவை.
இவை நச்சுத் துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவியிருக்கலாம் அல்லது விலக்கும் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை, அனல் மின் நிலையத் திட்டங்களுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அரசின் நிபுணர்கள் பரிந்துரையின் படி முடிவு செய்துகொள்ளலாம்.
எஞ்சிய 78% அனல் மின் நிலையங்களின் அலகுகள் சி பிரிவுக்குட்பட்டு உள்ளன. இவை அனைத்திற்கும், நச்சு துகள்களை பிரித்தெடுக்கும் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையங்களின் இந்த திருத்தப்பட்ட கொள்கையின் மூலம் மின் உற்பத்தி ஒரு யூனிட்டுக்கு 25 - 30 காசுகள் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையங்களில் நச்சு துகள்களைப் பிரித்தெடுக்கும் முறையில், அதிக மூலதன முதலீடு, அதிக மின் நுகர்வு, அதிக நீர் தேவைப்படுகிறது.
இவற்றைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | பூமிக்குத் திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா! விண்வெளி மையத்திலிருந்து பிரிந்தது டிராகன்!