சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை!
China: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி 'ராணுவத்தில்' பயன்படுத்த திட்டம் - எப்படி சாத்தியம்?
தேனீக்களின் மூளையில் சிறிய மைண்ட் கன்ட்ரோலிங் சிப்களை பொருத்துவதன் மூலம் அவற்றை ராணுவத்துக்குப் பயன்படுத்தும் சைபோர்க்களாக மாற்றும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது சீனா.
சைபோர்க் (Cyborg) என்பது ஒரே உயிரினம் கரிம (உயிரியல்) மற்றும் இயந்திர (எலெக்ட்ரானிக்) பாகங்களைக் கொண்டிருப்பதைக் குறிக்கும்.
இந்த தேனீக்களை மனிதர்கள் அணுக முடியாத இடங்களிலும், ரகசிய ராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
பெய்ஜிங் தொழில்நுட்ப நிறுவனம் உலகிலேயே மூளையைக் கட்டுப்படுத்தும் திறன்கொண்ட மிகச்சிறிய கருவியை உருவாக்கியுள்ளனர். இதன் எடை வெறும் 74 மில்லிகிராம் மட்டுமே.
இந்த கருவியை தேனீயின் முதுகில் வைத்து மூன்று ஊசிகள் மூலம் அதன் மூளையைத் துளைத்து பொருத்துவர். இதிலிருந்து கொடுக்கப்படும் மின்னணு துடிப்புகள் (எலெக்ட்ரானிக் பல்ஸ்) பற, வலதுபக்கம் திரும்பு, இடதுபக்கம் திரும்பு, கீழே செல் என கட்டளைகளைக் கொடுக்க முடியும்.
இதனை சோதித்துப்பார்த்ததில் பத்தில் 9 முறை தேனீக்கள் சரியாக சென்றிருக்கின்றன என்கிறது சௌத் சைனா போஸ்ட் தளம்.

இந்தக் கருவியை உருவாக்கிய குழுவின் தலைவரான பேராசிரியர் ஜாவோ ஜீலியாங், "பூச்சிகளை ரோபோட்களாக மாற்றும்போது இயற்கையான இயக்கம், உருமறைப்பு திறன்கள் மற்றும் சுற்றுச்சூழல் தகவமைப்புத் திறனைப் பெறமுடியும்." எனக் கூறியுள்ளார்.
மேலும், நகர்ப்புற கலவரங்கள், பயங்கரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் முக்கியமான பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் போன்ற சூழ்நிலைகளில் உளவுத்துறைக்கு தகவல்கள் அளிக்க இதைப் பயன்படுத்த முடியும் என்கிறார்.
இந்த மைண்ட் கண்ட்ரோலர்களை உருவாக்க முன்னதாக கரப்பான் பூச்சி, வண்டுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட சைபோர்க் மூளைக் கட்டுப்படுத்தி இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்கின்றனர். ஆனால் அந்த கருவி இப்போது இருப்பதை விட 3 மடங்கு அதிக எடை கொண்டதாக இருந்துள்ளது.
பேராசிரியர் ஜாவோவின் குழு கருவியின் எடையைக் குறைத்தது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இதன் துல்லியத்தன்மையை அதிகரிப்பதற்காக மேலதிக ஆராய்ச்சிகள் தொடரும் எனக் கூறியுள்ளனர்.