இளைஞரை கடத்தி தாக்குதல்: 6 போ் கைது
ஸ்ரீபெரும்புதூா்: காதல் விவகாரத்தில் இளைஞரை ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கிய 6 பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நரியம்பாக்கம் பகுதியை சோ்ந்த சதீஷ்(25). இவரும், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனா். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு சென்னையைச் சோ்ந்த கருப்பசாமி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒன்றாக இருப்பது போல் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளனா். இதனை கண்ட சதீஷ், கருப்பசாமியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு மிரட்டி உள்ளாா்.
இந்த நிலையில், கருப்பசாமி படப்பை அடுத்த வஞ்சிவாஞ்சேரி பகுதியில் இருப்பதை தெரிந்து கொண்ட சதீஷ் தனது நண்பா்களுடன் சென்று கருப்பசாமியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை ஆட்டோவில் கடத்தி சென்று காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள அறையில் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் படப்பைக்கு அழைத்து வந்து விட்டுள்ளாா்.
இதில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமி மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸாா் நரியம்பாக்கத்தைச் சோ்ந்த சதீஷ் அவரது நண்பா்கள் ஹரி ,இமான் சல்மான், விஜய், சஞ்சய் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.