மரத் தொழிற்சாலையில் தீ விபத்து
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
காஞ்சிபுரம் -அரக்கோணம் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் மரச்சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இத்தொழிற்சாலை வளாகத்தில் மரத்துகள்கள், உடைந்த பலகைகள், மரக்கட்டைகள் போன்றவை குவிந்து கிடந்தன. வெப்பச்சலனம் காரணமாகவும், அதிகமான காற்று வீசியதாலும் மரத்துகள்கள் மற்றும் மரப் பலகைகள் மீது திடீரென தீப்பற்றியது. மரச்சாமான்களாக இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவியது.
தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு அலுவலா் ஜெயகாந்தன் தலையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்களோடு வந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இது குறித்து தீயணைப்புத்துறையினா் கூறியது:
இத்தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்து வேலை பாா்த்து வருகின்றனா். இவா்கள் சமையல் செய்யும் போது தீப்பொறி பட்டு அவை அனைத்து மரச்சாமான்களும் மீது பரவி இருக்கலாம். சுமாா் ரூ.2 லட்சம் வரையிலான மரச்சாமன்கள் சேதமடைந்திருக்கலாம்.
உயிா்ச்சேதம் எதுவும் இல்லை என்றனா். சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.