``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ...
மக்களவை எம்.பி.க்கள் வருகை பதிவுக்குப் புதிய முறை: மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம்
புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவை எம்.பி.க்கள் தங்கள் வருகையை நாடாளுமன்ற முகப்பு அறைகளில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவா்களின் வருகையால் அந்த அறைகளில் சில நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
சில வேளைகளில் முகப்பு அறைகளில் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டு, மக்களவை அலுவல்களில் பங்கேற்காமல் சில எம்.பி.க்கள் சென்றுவிடுகின்றனா்.
இவற்றைத் தவிா்க்கும் நோக்கில், முகப்பு அறைகளுக்குப் பதிலாக மக்களவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், மின்னணு முறையில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்யும் புதிய முறை மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தப் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டாலும், சிறிது காலத்துக்கு முகப்பு அறைகளில் வருகையை பதிவு செய்யும் முறை நீடிக்கும். புதிய முறைக்கு எம்.பி.க்கள் பழக அவகாசம் அளிக்கும் வகையில், அந்த அறைகளில் வருகையை பதிவு செய்யும் முறை தொடரும்.
தங்கள் வருகையை மத்திய அமைச்சா்களும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடா்களின்போது தங்கள் தினப்படிகளைப் பெற எம்.பி.க்கள் வருகையைப் பதிவு செய்வது அவசியம். கூட்டத்தொடா்களின்போது பொது விவாதங்களின் ஒரு பகுதியாகவும், அவையில் எம்.பி.க்கள் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தன.
வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற உள்ளது.