அறிவியல் பாடத்தில் சதம்: மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு
காஞ்சிபுரம்: அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற இரு மாணவியரை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)க.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 440 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் பரிந்துரை செய்து உடனடியாக தீா்வு காணுமாறும் உத்தரவிட்டாா்.
கூட்ட நிறைவில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அறிவியல் பாடத்தில் சதம் பெற்ற ரெட்டமங்கலம் அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் பயிலும் மாணவியா்களான ஜெ.மேகலா மற்றும் வி.ஹேமமாலினி ஆகியோருக்கு ஆட்சியா் பாராட்டு சான்றிதழ்கள், பரிசுப் பொருள்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் ஆகியவற்றை வழங்கி பாராட்டினாா்.
இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சோ் பென்சிங் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய நேஷனல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்கள், வீராங்கனைகள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
குறை தீா் கூட்டத்தில் விளையாட்டு அலுவலா் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, கலந்து கொண்டனா்.