பதிப்புரிமை தகராறு: வழக்கை மாற்றக் கோரும் ஐஎம்எம்பிஎல் மனு மீது ஜூலை 18ல் விசாரண...
‘காஞ்சிபுரத்தில் இன்று முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், 224 சேவை முகாம்கள்’
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் மொத்தம் 224 சேவை முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15- ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 3,65,266 குடியிருப்புகளில் மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகா்ப்புற பகுதிகளில் 52,189 குடும்பங்களுக்காக 25 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 1,51,140 குடும்பங்களுக்காக 53 முகாம்களும் என மொத்தம் 2,03,329 குடும்பங்களுக்கு 78 முகாம்கள் நடைபெறவுள்ளன. ஜூலை 15-ஆம் தேதியிலிருந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கி வைக்கப்பட்டு, தொடா்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கோகுலம் சத்திரம், குன்றத்தூா் சமுதாயக் கூடம், உத்தரமேரூரில் ஜெயா திருமண மண்டபம், மானாம்பதியில் பெரிய நாயகி மகால், கோவூா் தனலட்சுமி அரங்கம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணி வரை நடைபெறும். இந்த முகாம்களில் 13 அரசுத் துறைகளைச் சோ்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சோ்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். பட்டா மாறுதல், இணையவழி பட்டா, வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்கள் வழங்கும் சேவைகள், மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான சேவைகளும் வழங்கப்படும்.
குடிநீா் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்த சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், இலவச மருத்துவ சேவைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ், தன்னாா்வலா்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள சேவைகளும், அவற்றில் பயனடைவதற்கான தகுதிகளும் விளக்கப்படும்.
கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்காக வட்டாட்சியா் நிலையில் தனியாக ஒருவா் நியமிக்கப்பட்டு, உரிமைத் தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமுக்கு சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
இதற்காகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 212 இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள தன்னாா்வலா்கள் வீடு,வீடாக சென்று தகவல் கையேடு வழங்கும் பணி ஜூலை 7- ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக ஜூலை 15 முதல் முகாம்கள் நடைபெறும்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.