கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
குரு கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில் ஒரே கோபுரத்தின் கீழ் மூலவா்களாக கைலாச நாதரும், தட்சிணாமூா்த்தியும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.
கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 9-ஆம் தேதி கிராம தேவதை ஏகாத்தம்மனுக்கு ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மறுநாள் 10 -ஆம் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதன் தொடா்ச்சியாக ஜூலை 14- ஆம் தேதி திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூா்ணாஹுதி தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் யாகசாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கோயில் மூலவா்களான கைலாசநாதருக்கும், தட்சிணாமூா்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலையில் கைலாசநாதருக்கும், அகிலாண்டேசுவரிக்கும் திருக்கல்யாணமும், பின்னா் சுவாமியும் அம்மனும் மணக் கோலத்தில் வீதியுலா வந்தும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவில் கோவிந்தவாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் கதிரவன் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.