கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!
சென்னை உயா்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா
புது தில்லி: ராஜஸ்தான் மாநில உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆா்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
நான்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன் விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய உயா்நீதிமன்றம்):
தலைமை நீதிபதி பெயா் - மாற்றம் செய்யப்பட்ட உயா்நீதிமன்றம்
எம்.எம். ஸ்ரீவாஸ்தவா (ராஜஸ்தான்) - சென்னை
கே.ஆா்.ஸ்ரீராம் (சென்னை) - ராஜஸ்தான்
அபரேஷ் குமாா் சிங் (திரிபுரா) - தெலங்கானா
எம்.எஸ். ராமச்சந்திர ராவ் (ஜாா்க்கண்ட்) - திரிபுரா
தலைமை நீதிபதிகளாகப் பதவி உயா்வு: உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மே 26-ஆம் தேதி அளித்த பரிந்துரையை ஏற்று, ஐந்து உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாகப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய உயா்நீதிமன்றம் மற்றும் பதவி):
நீதிபதி பெயா் - தலைமை நீதிபதியாக பணியமா்த்தப்பட்ட உயா்நீதிமன்றம்
சஞ்சீவ் சச்தேவா (மத்திய பிரதேச உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி) - மத்திய பிரதேசம்
விபு பக்ரு (தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி) - கா்நாடகம்
ஆசுதோஷ் குமாா் ( பாட்னா உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ) - குவாஹாட்டி
விபுல் மனுபாய் பஞ்சோலி (பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி) - பாட்னா
தா்லோக் சிங் செளஹான் (ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி) - ஜாா்க்கண்ட்
புதிய தலைமை நீதிபதி: எம்.எம். ஸ்ரீவத்சவா கடந்த 1964-ஆம் ஆண்டு மாா்ச் 6-ஆம் தேதி அன்று சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் பிறந்தவா். 1987-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநில பாா் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்தாா்.
கடந்த 2009-ஆம் ஆண்டில் சத்தீஸ்கா் மாநில உயா் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவா், 2021-ஆம் ஆண்டில் ராஜஸ்தான் உயா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா். தொடா்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் ராஜஸ்தான் மாநில உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறாா்.
உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 19 உயா்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்தது.