செய்திகள் :

"எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறி, காவி சாயத்துடன் இருக்கிறார்’’ - உதயநிதி விமர்சனம்

post image

திருவண்ணாமலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வந்தார்.

இன்று காலை, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் சகோதரர் மகன் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த உதயநிதி, `கலைஞரும் - கழகமும் போல, நம் முதலமைச்சரும் - திராவிட மாடலும் போலப் பல்லாண்டு வாழ்க' என இணையரை வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து, புதிய நகரப் பேருந்துகளையும், திருவண்ணாமலை - சென்னை இடையிலான குளிர்சாதன வசதி பேருந்துகளையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் உதயநிதி.

இதையடுத்து, சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரையும் நேரில் சந்தித்து குழு செயல்பாடுகளைக் கேட்டறிந்தார். இவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு திருவண்ணாமலை கலைஞர் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 41 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 13,000 பாக முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்திலும் கலந்துகொண்டார் உதயநிதி.

மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடிய உதயநிதி

அந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, ``திருவண்ணாமலையையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டுடைய நம்பிக்கைக்குரிய இயக்கமாக தி.மு.க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சில கட்சிகள் பூத் ஏஜென்ட் கூடப் போட முடியாத நிலைமையில் இருக்கின்றன. ஆனால், இன்றைக்கு நாம் பூத்தில் டிஜிட்டல் ஏஜென்ட்டை போட்டிருக்கிறோம். அந்த அளவுக்கு ஏஐ தொழில்நுட்பத்திலும் தி.மு.க தான் முதல் இயக்கமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு நிச்சயம் நாம்தான் வெற்றிபெறப் போகிறோம். இந்தியாவிலேயே வளர்க்கின்ற மாநிலங்களில் தமிழ்நாடு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால், நம்முடைய திராவிட மாடல் அரசும், நம்முடைய முதலமைச்சரும் தான் அதற்குக் காரணம்.

ஒவ்வொரு அரசுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். உதாரணத்துக்குப் பார்த்தீர்கள் என்றால், பா.ஜ.க-வை `பாசிச மாடல் அரசு’ என்றும், கடந்த பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க அரசை `அடிமை மாடல்’ என்றும் சொல்வார்கள்.

நம்முடைய அரசைப் பெருமையாக `திராவிட மாடல்’ என்று சொல்கிறோம். விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என இந்தத் திட்டங்களுக்கெல்லாம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

இதனால்தான் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தொடர்ந்து தொந்தரவுகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. மீண்டும் தி.மு.க ஆட்சி ஏன் வரவேண்டும்? அடிமை அ.தி.மு.க - பா.ஜ.க ஆட்சி ஏன் வரக்கூடாது? என்கிற பிரசாரத்தை மக்களிடம் கொண்டுபோய் நீங்கள்தான் சேர்க்க வேண்டும்.

`ஓரணியில் தமிழ்நாடு’ மிகப்பெரிய டாஸ்க். அதை முடித்துவிட்டாலே 50 சதவிகித வெற்றி உறுதியாகிவிடும். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின்கீழ் கடந்த பத்து நாள்களில் மட்டும் 91 லட்சம் உறுப்பினர்களைக் கழகத்தில் சேர்த்திருக்கிறோம்.

எந்தக் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அவர்களின் வீட்டுக்குச் சென்று அரசின் சாதனைகளையும், பணிகளையும் எடுத்துச் சொல்லவேண்டும்.

பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாக முகவர்கள்

தேர்தல் ரேஸில் நாம் இறங்கி, அதுவும் முன்வரிசையில் யாராலும் பிடிக்க முடியாது அளவுக்கு முதல் இடத்தில் போய்க்கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் பார்த்துத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குப் பதற்றம் வந்துவிட்டது.

`தி.மு.க-காரங்க தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டு மக்களின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள்’ என்று அவர் விமர்சனம் செய்கிறார். தமிழ்நாட்டு மக்களின் கதவை நாம் உரிமையுடன் தட்டுகிறோம்.

எடப்பாடி பழனிசாமியைப் போல அமித்ஷா வீட்டுக் கதவையோ, கமலாலய கதவையோ திருட்டுத்தனமாகப் போய் தட்டவில்லை. தி.மு.க-வுக்கு மக்கள் கொடுக்கின்ற ஆதரவைப் பார்த்து, எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சல் வருகிறது. அதனால், என்னென்னமோ உளறுகிறார்.

`பா.ஜ.க-வோடு இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை’ என்று சொல்லிவிட்டு, அடுத்த மாதமே ஓடி ஒளிந்து நான்கு கார் மாறிப்போய் டெல்லியில் கள்ளக்கூட்டணி வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. `கூட்டணி ஆட்சி’ என்று அமித்ஷா சொல்கிறார். `தனித்துவமான ஆட்சி’ என்று மறுநாளே எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத நிலைமை.

இவர்கள் இரண்டு பேரும் இப்படிப் போட்டிப் போட்டுக்கொண்டிருந்தால், தமிழ்நாட்டில் அவர்களின் கூட்டணி ஒரு தொகுதியில்கூட டெபாசிட் வாங்காது. அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு சுயநலத்துக்காக அமித்ஷாவிடம் மொத்தமாக அடமானம் வைத்த எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுமே சிரிக்கிறார்கள்.

`இந்து சமய அறநிலையத்துறைச் சார்பாக கல்லூரிகள் கட்டலாமா? இது எவ்வளவுப் பெரிய அநியாயம்’ என்றும் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. கோயில் நிதியில் ஏழை, எளியப் பிள்ளைகள் படிக்கின்ற கல்லூரிகள் தொடங்கினால், எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வருகிறது?

உதயநிதி ஸ்டாலின்

`இந்து சமய அறநிலையத்துறையே இருக்கக் கூடாது’ என்று சொல்கிற பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்திருப்பதால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியும் முழு சங்கியாக மாறிவிட்டார். அவரின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு வந்ததால், `நான் அப்படிப் பேசவில்லை; இப்படிப் பேசவில்லை’ என மழுப்புகிறார்.

பிரசாரத்தை ஆரம்பித்தபோது, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையோடுதான் இருந்தார். இன்றைக்கு முழுக் காவி சாயத்துடன் இருக்கிறார். இனி, அதை மூடிமறைத்து எந்தப் பயனும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்கள் தமிழ்நாட்டுக்குள் பா.ஜ.க-வுக்குப் பாதை போட்டுக்கொடுக்கலாம் என்று பார்க்கிறீர்கள்.

உங்களைத் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். உங்களின் அந்த எண்ணத்தை கருப்பு, சிவப்பு வேட்டிக் கட்டிய எங்களின் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் நிச்சயம் தடுப்பார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் நின்று அடிமைகளையும், பாசிஸ்ட்களையும் வீழ்த்தப் போவது உறுதி’’ என்றார் உதயநிதி ஸ்டாலின்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

எஸ்சி, எஸ்டி, ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை குறைப்பு; மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறைதான் காரணமா?

மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின (எஸ்சி), பழங்குடி (எஸ்டி) மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களில் 40% க்கும் குறைவானவர்களே உதவித்தொகை பெறுவர் என்று தெரிவிக... மேலும் பார்க்க

தென்காசி: "குடிநீர் பிரச்னை தலைவலியா இருக்கா?" - அதிகாரிகளுக்குத் தலைவலி மருந்து கொடுத்த கவுன்சிலர்

தென்காசி நகராட்சி 33 வார்டுகளைக் கொண்ட பகுதியாகும். நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்றக் கூட்டம் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இதி... மேலும் பார்க்க

'அமெரிக்கா விசா பெறும்போது மட்டுமல்ல, அதன் பின்னும்...' - ட்ரம்ப் அரசின் கிடுக்குபிடி

அமெரிக்கா தற்போது அவர்களது நாட்டிற்குள் வருபவர்கள் மற்றும் இருப்பவர்களை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்கள், இனி குடியேறப் போகிறவர்கள் என எவரும் அரசிற்கு எதிரா... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசும்; OLA, UBER-க்குச் சாதகமான மத்திய அரசும் | In-Depth

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு அரசுப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், ஆட்டோ, டாக்சி போன்ற தன... மேலும் பார்க்க

வேலூர்: கோட்டையின் நடைபாதையில் ஏற்பட்ட பள்ளம்; அச்சத்துடன் நடந்து செல்லும் பாதசாரிகள்!

வேலூரின் அடையாளமாக விளங்கக்கூடிய வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேலூர் கோட்டையை முழுவதுமாக சுற்றி வர கோட்டை சுற்று சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின... மேலும் பார்க்க

``என் வீட்டிலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்'' - பாமக ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இந்தக் கருத்து மோதலில் ராமதாஸ், தன் பெயரை அன்புமணியின் பெயருக... மேலும் பார்க்க