Velpari: "எழுத்தாளர்கள் வேள்பாரி போன்ற படைப்புகளைக் கொடுக்க வேண்டும்" - முதலமைச்சர் வாழ்த்து
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) சு.வெங்கடேசன் எழுத்தில் விகடன் பிரசுரம் வெளியிட்ட வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் தாண்டி விற்றதற்கான வெற்றிப் பெருவிழா கொண்டாடடப்பட்டது.
சு.வெங்கடேசனின் சாதனைக்காக பல தரப்புகளில் இருந்து பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சு.வெங்கடேசனை வாழ்த்தியுள்ளார்.

அவரது பதிவில். "வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது எனப் பலரும் குறைபட்டுக் கொள்ளும் காலத்தில், ஒரு இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிச் சாதனை படைத்திருக்கிறது ‘#வீரயுக_நாயகன்_வேள்பாரி’!
"தொடராக வெளிவந்தபோதே படித்தவர்களையும் - இணையப் பக்கத்தில் படித்தவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை பல மடங்காகும்! அத்தனை பேருள்ளும் சகோதரர் சு.வெங்கடேசன அவர்களின் எழுத்து ஏற்படுத்திய தாக்கத்தால்தான், பலரும் தங்களது குழந்தைகளுக்கு வேள்பாரி மாந்தர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர்!
தமிழுணர்வையும் - தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும். பல இளம் எழுத்தாளர்கள் உருவாகி அத்தகைய படைப்புகளைக் கொடுத்திட வேண்டும்!
தன் சாதனையைத் தானே விஞ்சும் அளவில் சகோதரர் சு.வெ தனது அடுத்த படைப்புகளை எழுதிட இப்போதே வாழ்த்துகிறேன்!" என வாழ்த்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வேள்பாரி
'முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி' என்ற ஒற்றை வரி மூலம் நம் அனைவருக்கும் அறிமுகமான வேள்பாரியின் வரலாற்றை தற்கால அரசியல் சூழலுக்கும் பொருந்தும் வகையில் பேசும் நூல் வேள்பாரி.
பரம்பு மலையின் இயற்கை வளம், கதாப்பாத்திரங்களின் மனங்கள், தமிழ் குடிகளின் வீரம் ஆகியவற்றைப் பேசியதற்காக வாசகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நூல் இது.
2016 முதல் 2018 வரை ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த இந்த நூல், 2018 டிசம்பரில் நூலாக வெளியிடப்பட்டது. 6 ஆண்டுகளில் 1,00,000 புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.