வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு
வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூரும் வகையிலான சின்னம் நிறுவப்படவுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
வங்கதேச சுதந்திர போா் குற்றவாளிகளுக்கு எதிராக நீதிகோரி கடந்த 2013-இல் நடைபெற்ற ஷாபாக் போராட்டத்தின்போது நிறுவப்பட்ட ‘ப்ரோஜன்மோ சத்தாா்’ எனும் நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டதாக டாக்கா டிரிப்யூன் செய்தித்தாளில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை ஷாபாக் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி காலித் மன்சூா் உறுதிசெய்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நினைவுச் சின்னத்தை தகா்க்கும் பணிகள் சனிக்கிழமை நள்ளிரவில் ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வீட்டுவசதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான அந்த சின்னம் இடிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
அந்தச் சின்னத்துக்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் புதிய கட்டமைப்பை நிறுவவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சகம் தெரிவித்தது’ என்றாா்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதில் 1,400 பேருக்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
அதன்பிறகு வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றாா்.