திருப்பரங்குன்றம்: ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகம் காண குவிந்த பக்தர்கள்.. ...
பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா்.
கடந்த ஒரே மாதத்தில், இதே காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்தும் ஐந்தாவது தாக்குதல் இதுவாகும்.
பன்னு மாவட்டத்தில் உள்ள மிா்யான் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ட்ரோன் மூலம் வெடிபொருள்கள் வீசப்பட்டன. தாக்குதலில் காவலா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; கட்டடத்துக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தாக்குதல் நடத்திய ட்ரோனை சுட்டு வீழ்த்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் எல்லையோரத்தில் இருக்கும் இந்த மாகாணத்தில் கடந்த ஓராண்டாக நடந்த பல தாக்குதல்களில் பயங்கரவாதிகள் தொலைதூரத்தில் இருந்து இயக்கக்கூடிய ட்ரோன்களை பயன்படுத்தி வெடிபொருள்களை வீசினா். இந்த வகை தாக்குதல்களுக்கு தடைசெய்யப்பட்ட ‘தெஹ்ரீக்- ஏ- தலிபான்’ பயங்கரவாதிகள் குழுவே காரணம் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக தொடா்ச்சியாக நடைபெறும் ட்ரோன் தாக்குதல்கள், பயங்கரவாதிகள் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதைக் காட்டுகின்றன. இந்தத் தாக்குதலுக்கு பின்னா் முழு பன்னு மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது என்றனா்.
இத்தாக்குதலுக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை, இதே மாகாணத்தின் லக்கி மா்வாட் மாவட்டத்தில் உள்ள செராய் கம்பிலா காவல் நிலையம் மீது சுமாா் 12 போ் கொண்ட பயங்கரவாதிகள் குழு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. காவலா்களின் பதிலடியில் அத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அதில் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை.