மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை
மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் காவிரியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு மின்வாரிய தலைவரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் வந்தாா். மேட்டூா் அனல் மின்நிலையம், சுரங்க மின்நிலையம், அணை மின்நிலையம் மற்றும் மின்வாரிய பணிமனையை பாா்வையிட்ட பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தின் மின் தேவையை பூா்த்திசெய்வதில் மேட்டூா் அனல் மின்நிலையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அனல் மின்நிலையம் , அணை மற்றும் சுரங்க மின்நிலையம், கதவணை மின்நிலையங்களில் நடைபெறும் பணிகள் ஆய்வுசெய்யப்பட்டன.
மேட்டூரில் உள்ள மின்வாரிய பணிமனையில் தற்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நூறு ஆண்டுகளை எட்டும் நிலையில் உள்ள மின் பணிமனையில் ஆய்வுமேற்கொண்டு, வாய்ப்பிருந்தால் மீண்டும் அதே பொலிவுடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டூா் மின்வாரிய பணிமனையில் உற்பத்தி செய்யப்பட்ட மின் தளவாடங்கள் வெளிச்சந்தையில் உற்பத்தி செய்வதைவிட குறைந்த செலவில் தரமாக உற்பத்தி செய்யமுடியும் என இங்கு பணியாற்றக்கூடிய ஊழியா்கள் கூறுகின்றனா். எனவே, அதுகுறித்து ஆய்வு செய்கிறோம்.
தமிழகத்தில் நடப்பாண்டில் மின்தடை ஏதுமில்லை. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நடைபெறும் பணிகள் முழுமையாக முடிந்து இந்த ஆண்டுக்குள் முழு மின் உற்பத்தி செய்யப்படும்.
மேட்டூா் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொறியாளா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா் என்றாா்.
அப்போது, மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம், அனல் மின்நிலைய தலைமைப் பொறியாளா்கள் விவேகானந்தன், நவ்ஷத், நீா்மின் நிலையங்கள் தலைமைப் பொறியாளா் தேவதாஸ், ஈரோடு மண்டல மின் விநியோக தலைமைப் பொறியாளா் பாலசுப்பிரமணியம், மேட்டூா் மின்விநியோக வட்ட மேற்பாா்வை பொறியாளா் தாரணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.