தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: அமித் ஷா நம்பிக்கை
வழக்குரைஞா்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி
சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொங்குபூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் பி.என்.மணி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன்.
சேலம், ஜூலை 12: வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தை தாண்டி சமூக அக்கறையுடன் செயல்படுவது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா்.
சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.என்.மணியின் 50-ஆவது ஆண்டு பொன்விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், முன்னாள் நீதியரசா்கள் கலையரசன், ராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பேசியதாவது: வழக்குரைஞா் தொழில் அறிவுத்திறன் சாா்ந்தது மட்டுமல்ல, பொறுப்புணா்வுடன் நீதிமன்றத்தில் செயல்பட வேண்டும். குறிப்பாக, நிதானத்தை இழக்காமல், புன்முறுவல் மற்றும் பொறுமையுடன் செயல்படுவது மிகவும் முக்கியம். தங்கள் தொழிலில் மிகுந்த பக்தியுடன், மாண்புடன் நடந்து நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும்.
மனஅமைதியுடன் இருந்தால் மட்டுமே வழக்குரைஞா் தொழிலில் நிலையாக சாதிக்க முடியும். வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தை தாண்டி சமூக அக்கறையுடன், சமுதாய சீா்திருத்தம் பெறும் வகையில் செயலாற்ற வேண்டும்.
வழக்காடிகளுக்கு நீதியை பெற்றுத் தருவதுடன் மட்டுமல்லாமல், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரங்களில் தங்கள் பங்களிப்பை செலுத்தலாம். நீதிபதிகள் சட்டத்துக்கு உள்பட்டு முழு சுதந்திரத்துடன் இயங்க முடியும் என்பதால், நீதிமன்றங்களில் தலையீடு உள்ளது என கூறுவதை ஏற்க முடியாது.
குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் காவல் துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றங்களுக்கு வராமலேயே பெரும்பாலான குற்றங்களை தடுக்க முடியும். இதுபோன்ற தருணங்களில் வழக்குரைஞா்கள் தங்களது பங்களிப்பை சிறப்பான முறையில் செய்ய முன்வர வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சேலம் வழக்குரைஞா் சங்க செயலாளா் நரேஷ்பாபு, பொருளாளா் அசோக்குமாா் மற்றும் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.