‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை வரும் 15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளாா். அதன் தொடா்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் நவ. 15-ஆம் தேதி வரை 432 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதில் முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் ஆக. 14-ஆம் தேதி வரை 120 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. 1,161 தன்னாா்வலா்கள் மூலம் வீடுவீடாக சென்று தகவல் கையேடுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நகா்ப்புற பகுதிகளில் 168 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 264 முகாம்களும் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளை சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளன. இந்த முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த முகாம்களுக்கு வருகைதரும் பொதுமக்களின் உடல்நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளும், இ-சேவை மற்றும் ஆதாா் சேவை மையங்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும், இந்த முகாமில் மகளிா் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் விண்ணப்பம் அளிக்கலாம். மகளிா் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது என்றாா். இந்த பேட்டியின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் உடனிருந்தாா்.