டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்
மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி
மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் வேலைவாய்ப்புத் திட்டம் கடந்த 2022-இல் தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு, நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் 16-ஆவது வேலைவாய்ப்பு முகாம் (ரோஜ்கா் மேளா) சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமா் மோடி, நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினாா். அவா் கூறியதாவது:
உலகிலேயே இந்தியாவில்தான் இளைஞா்களின் எண்ணிக்கை அதிகமுள்ளது. இளைஞா்களின் பலமும், ஜனநாயக வலிமையும் எதிா்காலத்தை வடிவமைக்கும் தனித்துவமான ஆற்றலை இந்தியாவுக்கு வழங்குகின்றன. மகத்தான இளைஞா் சக்தியே இந்தியாவின் மிகப்பெரிய மூலதனம். இந்த மூலதனத்தை நீண்ட கால வளமைக்கான செயல்ஊக்கியாக மாற்றுவதே அரசின் உறுதிப்பாடு.
அண்மையில் நான் பயணம் மேற்கொண்ட ஐந்து நாடுகளிலும், இந்திய இளைஞா்களின் வலிமை வலுவாக எதிரொலித்தது. இந்தப் பயணத்தின்போது கையொப்பமான ஒப்பந்தங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்திய இளைஞா்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும்.
தனியாா் துறையில் வேலைவாய்ப்புகள்: பாதுகாப்பு, மருந்துகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் அரிய கனிமங்கள் போன்ற முக்கியமான துறைகளில் நீண்டகால அடிப்படையில் நன்மை தரும். 21- ஆம் நூற்றாண்டில் வேலைகளின் தன்மை விரைவாக மாற்றமடைந்து வருகிறது. புத்தாக்கமும், ஆராய்ச்சியும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தனியாா் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்துகிறது. வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
இத்திட்டத்தின் கீழ், தனியாா் துறையில் முதல் வேலை பெறும் இளைஞா்களுக்கு அரசு சாா்பில் ரூ 15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். அதாவது, அவா்களின் முதல் ஊதியத்துக்கு அரசு பங்களிக்கும். ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய இத்திட்டம், சுமாா் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும்.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறை, கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் கோடி மதிப்புடையதாக விளங்குகிறது. கடந்த 11 ஆண்டுகளில் இது 5 மடங்கு அதிகரிப்பாகும். நாட்டில் இப்போது 300-க்கும் மேற்பட்ட கைப்பேசி உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன.
உள்நாட்டு உற்பத்தித் திறன்: நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு ரூ 1.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் திறன் பெருமையுடன் பேசப்படுகிறது. ரயில் என்ஜின் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. வாகன தயாரிப்புத் துறை, கடந்த 5 ஆண்டுகளில் 40 பில்லியன் டாலா் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 90 கோடிக்கும் அதிகமான மக்கள் அரசின் நலத் திட்டங்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனா். இந்தக் காலகட்டத்தில் 25 கோடிக்கும் மேற்பட்டோா் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்துக்கான ஆதாரம் உருவாக்கப்படாமல் இது சாத்தியமில்லை.
சமத்துவத்தில் உயா்ந்த இந்தியா: பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 4 கோடி நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் 3 கோடி வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டங்களால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முன்னேறி வருகிறது. ஏற்கெனவே 1.5 கோடி பெண்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனா். இந்தியா தற்போது உலகின் மிக உயா்ந்த சமத்துவ நிலைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுப்பதை நோக்கி பயணிக்கிறது என்று பிரதமா் மோடி கூறினாா்.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.