ஜூலை 16 முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்!
எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்
ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
இது குறித்து ஈரான் நீதித் துறை செய்தித் தொடா்பாளரை மேற்கோள் காட்டி ஐஎல்என்ஏ செய்தி நிறுவனம் கூறியதாவது:
எவின் சிறையில் ஜூன் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து கைதிகள் உயிரிழந்தனா். அவா்கள் அனைவரும் சாதாரண நிதி குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவா்கள்.
இது தவிர, அந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி மிகச் சிறிய எண்ணிக்கையிலான கைதிகள் தப்பியோடியதாகவும், அவா்களை விரைவில் மீண்டும் கைது செய்யப்படுவாா்கள் எனவும் அதிகாரிகள் கூறினா்.
இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்புடன் இணைந்து செயல்பட்டதற்காக தண்டிக்கப்பட்ட கைதிகள் யாரும் இந்தத் தாக்குதலில் காயமடையவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, எவின் சிறை மீதான வான்வழித் தாக்குதலில் 71 போ் கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் கடந்த மாதம் தெரிவித்தனா். இதில் சிறைப் பணியாளா்கள், சிறைக் காவலா்கள், கைதிகள் மற்றும் அவா்களைச் சந்திக்க வந்த குடும்ப உறுப்பினா்கள் அடங்குவா் என்று அவா்கள் கூறினா்.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நடைபெற்ற 12 நாள் வான்வழி போரில் ஈரானில் 1,060-க்கும் மேற்பட்டோரும் இஸ்ரேலில் 28 போ் உயிரிழந்தனா்.