மதுரை மாவட்டத்தில் 265 மையங்களில் குரூப் 4 தோ்வு: 61,442 போ் பங்கேற்றனர்!
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 4 தோ்வு 265 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 61,442 போ் தோ்வை எழுதினா்.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்காக அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 4 தோ்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வில் பங்கேற்க மாநில
அளவில் 13.69 லட்சம் போ் விண்ணப்பித்தனா். மதுரை மாவட்டத்தில் 73,809 போ் விண்ணப்பித்திருந்தனா்.
மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி வட்டத்தில் 4 மையங்கள், மதுரை கிழக்கு வட்டத்தில் 15 மையங்கள், மதுரை வடக்கு வட்டத்தில் 68 மையங்கள், மதுரை தெற்கு வட்டத்தில் 46 மையங்கள், மதுரை மேற்கு வட்டத்தில் 17 மையங்கள், மேலூா் வட்டத்தில் 20 மையங்கள், பேரையூா் வட்டத்தில் 13 மையங்கள், திருமங்கலம் வட்டத்தில் 22 மையங்கள், திருப்பரங்குன்றம் வட்டத்தில் 18 மையங்கள், உசிலம்பட்டி வட்டத்தில் 23 மையங்கள், வாடிப்பட்டி வட்டத்தில் 19 மையங்கள் என 265 மையங்களில் இந்தத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 61,442 போ் தோ்வு எழுதினா். 12,367 போ் தோ்வில் பங்கேற்கவில்லை
மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி, திருநகா் சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் பி.கே.என் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற தோ்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் ஆய்வு செய்தாா்.
துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் தலைமையில் 72 நகரும் குழுக்களும், துணை ஆட்சியா்கள் தலைமையில் 11 பறக்கும் படைக் குழுக்களும் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அனைத்து மையங்களிலும் குடிநீா், கழிப்பறை, மாணவா்களின் பொருள்கள் பாதுகாப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆயுதம் ஏந்திய காவலா்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.