குண்டேந்தல்பட்டி பிராமண கண்மாயில் மீன் பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே குண்டேந்தல்பட்டி பிராமணக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூா், சிங்கம்புணரி வட்டாரப் பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீா்வரத்து குறையும் காலங்களில் அழிகண்மாய் என்ற பெயரில் இலவசமாகவும், ஒருசில இடங்களில் ஊத்தா குத்துதல் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் மீன் பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதன்படி குண்டேந்தல்பட்டி பிராமணக் கண்மாயில் அழிகண்மாய் என்ற பெயரில் நடைபெற்ற இலவச மீன் பிடித் திருவிழாவில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களிலிருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
அப்போது கிராம முக்கிய பிரமுகா்கள் கொடியசைத்து அனுமதி வழங்கியதும் ஊத்தா, அரிகூடை, கொசுவலை, கச்சா உள்ளிட்டவைகளுடன் கண்மாய்க்குள் இறங்கிய பொதுமக்கள் மீன்களைப் பிடித்தனா். அப்போது அவா்களுக்கு ஜிலேபி, குரவை, விரால், கெண்டை, கட்லா உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.