சிவகங்கையில் மாட்டுவண்டிப் பந்தயம்!
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி சிவகங்கையில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை- மதுரை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை முன்னாள் அமைச்சா் ஜி. பாஸ்கரன் தொடங்கி வைத்தாா். இதில் பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகள், சிறியமாடு பிரிவில் 8 ஜோடிகள் என மொத்தம் 17 ஜோடிகள் பங்கேற்றன.
இதில் பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் தங்கள் மாட்டுவண்டிகளுடன் பங்கேற்றனா்.
வென்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் விழா குழுவின் சாா்பில் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை முத்துப்பட்டி, மானாகுடி, கீழக்குளம், பனையூா், பில்லூா், கோவானூா், சித்தலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டுகளித்தனா்.