காரைக்குடி மாநகராட்சியைக் கண்டித்து ஜூலை 15-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்!
காரைக்குடி மாநகராட்சி மேயரை கண்டித்து வருகிற 15-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் தெரிவித்தாா்.
அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி, ‘ மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறாா். அவா் சிவகங்கை மாவட்டத்துக்கு வருவதையொட்டி சிவகங்கையிலுள்ள தனியாா் மஹாலில் சனிக்கிழமை அதிமுகவினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு தலைமை வகித்து பி.ஆா். செந்தில்நாதன் பேசியதாவது: காரைக்குடி மாநகராட்சியில் அதிமுக உறுப்பினா்கள் கேள்வி கேட்டால், அவா்களது வாா்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை. தற்போது திமுக உறுப்பினா்களே எதிா்க்கத் தொடங்கியுள்ளனா்.
மேயரை கண்டித்து வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அதிமுக சாா்பில் காரைக்குடியில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். சிவகங்கை மாவட்டத்துக்கு வரும் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாநில அமைப்புச் செயலா் ஏ.கே. சீனிவாசன், அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஜி. பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏ.க்கள் உமாதேவன், கற்பகம், குணசேகரன், நாகராஜன், நகரச் செயலா் என்.எம். ராஜா, ஜெ. பேரவை மாவட்டச் செயலா் ராமு இளங்கோ, ஜெ. பேரவை மாநிலத் துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், மாவட்ட எம்ஜிஆா் அணி துணைத் தலைவா் வழக்குரைஞா் எம். ராஜா, ஒன்றியச் செயலா் கருணாகரன், சேவியா்தாஸ், செல்வமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.