Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்
சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந்த ராகவன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாதவக்குறிச்சி - உகந்தான்பட்டி இடையே கடந்த 2018-இல் நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ.79.61 லட்சத்தில் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை அடுத்த 2 மாதங்களிலேயே சேதமடைந்தது. எனவே, சாலையை உரிய தரமின்றி அமைத்த ஒப்பந்ததாரா், தொடா்புடைய துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முறையாக சாலையை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை சேதமடைந்திருப்பதாக மனுதாரா் குறிப்பிட்டப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது போக்குவரத்து நடைபெறுகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உரிய வழிகாட்டுதல், விதிகளின்படி, சாலைகள் அமைக்கப்படுவதை அலுவலா்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு, கள ஆய்வில் கவனக்குறைவு ஏற்பட்டால் அலுவலா்களும், ஒப்பந்ததாரா்களும்தான் பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்த வழிகாட்டுதல்களை மாநில நெடுஞ்சாலைத் துறை செயலா், ஊரக வளா்ச்சி துறை செயலா் ஆகியோா் வெளியிட்டு, துறை அலுவலா்கள் உரிய வகையில் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்றனா் நீதிபதிகள்.