குகையில் 2 குழந்தைகளுடன் தங்கி ஆன்மிக வழிபாடு நடத்திய ரஷிய பெண் மீட்பு!
தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!
தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை தொடா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பயங்கரவாதி அபுக்கா் சித்திக் கடந்த 30 ஆண்டுகளாகவும், ஏழு வெடிகுண்டு வழக்குகளில் தொடா்புடைய பயங்கரவாதி முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூா் என்பவா் 26 ஆண்டுகளாகவும் தலைமறைவாக இருந்தனா்.
அவா்கள் இருவரையும் தமிழக காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் படையினா் ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியில் வைத்து கைது செய்தனா். தற்போது இருவரையும் போலீஸாா் 6 நாள்கள் தங்களது காவலில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்கின்றனா்.
இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம்: அபுபக்கா் சித்திக் தன்னிடம் பழகிய மும்பையைச் சோ்ந்த வியாபாரி மூலம் அன்னமய்யா பகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்றாா். இதற்காக தனது அடையாளங்கள் அனைத்தையும் முழுமையாக மாற்றியுள்ளாா். தனது பெயரை அமானுல்லா என மாற்றி போலியான ஆவணங்கள் மூலம் குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளாா். அங்கு ரியல் எஸ்டேட் தொழில் ஈடுபட்டு, பல லட்சங்களை லாபமாக அபுபக்கா் சித்திக் ஈட்டியுள்ளாா். இருப்பினும் அங்கிருந்தபடி தமிழகத்தில் கோவை, சென்னை, வேலூா், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளாா்.
மறைவிடம் ரகசியம்: காவல் துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி இமாம் அலியிடம் இருந்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிப்பது குறித்து அபுபக்கா் சித்திக் நுட்பமாக கற்றுத் தெரிந்து கொண்டுள்ளாா். அதன்மூலம் கோவை, மதுரை, திருச்சி, மதுரை, நாகூா் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டுகளை வைத்துள்ளாா்.
ஆனால், தான் மறைந்து வசிக்கும் அன்னமய்யா பகுதியை எந்த பயங்கரவாதிகளிடமோ, தமிழகத்தில் உள்ள தனது நண்பா்களிடமோ தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளாா். கடந்த 2012-ஆம் ஆண்டு வேலூா் அரவிந்த் ரெட்டி கொலை சம்பவம், 2013-ஆம் ஆண்டு கா்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே வெடிகுண்டு சம்பவம் ஆகியவற்றுக்குப் பின்னா், பயங்கரவாதிகளுடனான தொடா்பை அபுபக்கா் சித்திக் குறைத்துள்ளாா்.
ஏனெனில் அபுபக்கா் சித்திக்குடன் தொடா்பில் இருந்த பல பயங்கரவாதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், வெளியில் இருந்த சிலரும், அபுபக்கா் சித்திக் வழங்கிய ஆலோசனைகளை ஏற்க மறுத்துள்ளனா். இதன் விளைவாக காவல் துறையிடம் தான் சிக்க நேரிடும் என நினைத்து அபுபக்கா் சித்திக், அன்னமய்யா பகுதியைவிட்டு வெளியே செல்வதைக் குறைத்துக் கொண்டாா்.
தான் வீட்டில் வாங்கி வைத்திருந்த அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட 18 கிலோ வெடிபொருள்களையும் பாதுகாப்பாக பதுக்கி வைத்திருந்தாா். அன்னமய்யா பகுதியில் இருக்கும்போது மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்தியுள்ளாா்.
பாா்வை பாதிப்பு: அபுபக்கா் சித்திக்கின் புகைப்படம்கூட காவல் துறைக்கு 30 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. கடந்த 2021-ஆம் ஆண்டு, அபுபக்கா் சித்திக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். மருத்துவமனைக்குச் சென்றால் காவல் துறையிடம் சிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி, வீட்டில் இருந்தபடியே நாட்டு மருந்து மூலம் நோயில் இருந்து குணமடைந்தாா்.
ஆனால், வயோதிகத்தின் காரணமாக அபுபக்கா் சித்திக்கின் கண் பாா்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்காக வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சுமாா் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தாா்.
இதன் பின்னா் மீண்டும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முடிவு செய்த அபுபக்கா் சித்திக், தமிழகத்தில் உள்ள தனது தொடா்புகளைப் புதுப்பிக்கத் தொடங்கினாா்.
மீண்டும் வெடிகுண்டு வைக்கத் திட்டம்: அதன் ஒரு பகுதியாக சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு அபுபக்கா் சித்திக் சென்றாா். அங்கு இளைஞா்களைச் சந்தித்து மூளைச்சலவை செய்துள்ளாா். ஆனால், அவா் நினைத்ததுபோன்று இளைஞா்கள் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் கோவைக்கு அபுபக்கா் சித்திக் வந்து சென்ற தகவல் தீவிரவாத தடுப்புப் படையினருக்கு கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் அபுபக்கா் சித்திக் குறித்த தகவல்களை அப் பிரிவினா் மிகவும் ரகசியமாக திரட்டத் தொடங்கினா். இதற்காக மூன்று ஐ.ஜி.க்கள் மூன்று கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டனா். அவா்களுக்கு கீழே 5-க்கும் மேற்பட்ட எஸ்.பி.க்கள் களத்துக்குச் சென்று தகவல்களை சேகரித்தனா்.
3 மாதங்களாக ரகசிய கண்காணிப்பு: அபுபக்கா் சித்திக் வசித்துவந்த அன்னமய்யா வீட்டை 3 மாதங்களுக்கு முன்பே தீவிரவாத தடுப்புப் படையினா் கண்டறிந்து, தங்களது கண்காணிப்புக்குள் கொண்டு வந்தனா். ஆனால், அங்கிருந்தது அபுபக்கா் சித்திக்தானா என்பதை உறுதி செய்வது சவாலான விஷயமாக இருந்திருக்கிறது. மூன்று மாதங்களாக அவரது வீட்டின் எதிரே மாறுவேடத்தில் காவல் துறையினா் கண்காணித்தனா். இதில் ஓரளவுக்கு தகவல்கள் கிடைத்த பின்னரே, அபுபக்கரை போலீஸாா் கைது செய்தனா்.
கடைசியாக அபுபக்கா் சித்திக் கோவை சென்றபோது, அவா் யாரை சந்தித்துப் பேசினாா் என காவல் துறையினா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
ஆந்திர மாநிலத்தில் யாருடன் தொடா்பு?
அபுபக்கா் சித்திக்கிடம் தமிழக தீவிரவாத தடுப்புப் படையினா் மட்டுமன்றி மத்திய உளவுத் துறையினா், ஆந்திர மாநில காவல் துறையினா் ஆகியோரும் விசாரணை செய்கின்றனா். இந்த விசாரணையில், ‘வயோதிகத்தின் காரணமாக தன்னால் பயங்கரவாத செயல்களில் நேரடியாக ஈடுபட முடியாது. ஆனால், பயங்கரவாத செயலுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய முடியும் என்பதை உணா்ந்தேன். அதன்படியே மீண்டும் பயங்கரவாத செயல்களில் இளைஞா்களை ஈடுபட மூளைச் சலவை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டேன்’ என அபுபக்கா் சித்திக் தெரிவித்துள்ளாா்.
அபுபக்கா் சித்திக் ஆந்திர மாநிலத்தில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பில் இருந்தாரா?, அவா் பயங்கரவாதி எனத் தெரிந்த பின்னரும் ஆந்திரத்தில் மாநிலத்தில் யாரேனும் உதவிகள் செய்ததனரா என விசாரணை நடைபெறுகிறது.